Pages

Wednesday, July 7, 2010

தள்ளாடும்.................. 'முதுமை'
சமுகம் சார்ந்த முதுமை:

தள்ளாடும் வயதிலே தவிக்கும் முதுமைகள் ஆதரவற்று அனாதைகளாகப்படுகின்றன. இந்த முதுமை அனாதைகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோர் சமூகத்தில் அதிகம் பேர் இருந்தாலும் முதுமைகளின் அவலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. இதற்கு யார் காரணம்.? எவை காரணம்.? என்று நம் உள்ளம் ஒரு நாளேனும் ஆராய்ந்ததுண்டா... காரணம் கேட்டால் சமூகம் என்று கூறி அதன் மேல் பழிபோட்டு தப்பித்துகொள்கிறோம். நாம்தான் இந்த சமுகம். இதற்கு நாம் யாவரும் பொறுப்பாளிகள். முதுமையை எள்ளி நகையாடும் இந்த இளம் உறவுகளுக்கு தெரியாது நாமும் ஒரு நாள் முதுமை அடைவோம். ஒரு நாள் வீழ்வோம் என்று அறியாமல் இருக்கும். "இளம் விழுது காய்ந்த விழுதை பார்த்து சிரித்ததாம்" இதை பழமொழியாய் சொல்வார்கள். ஆனால் முதுமையை, உற்றஉறவுகளால் துரத்தியடிக்கும்போது இதை காண்பவர் நெஞ்சம் பதறும் "ஐயோ படுபாவி பெத்த அப்பன்னுகுட பார்காம பொண்டாடிகுட சேர்ந்து இப்படி திட்டறானே இவனுன்ங்களா உருபடுவான்களா" என்று அழாத குறையாய் வருத்தபடுவாங்க..அப்படி அவர்கள் வருத்தபடுவது வெளியில் உள்ள முதியவர்களுக்கு மட்டும்தான். தன் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு இது பொருந்தாது என்றே நினைப்பார்கள். இது எப்படி இருக்கும் என்றால்  மெகா சீரியல்கள் பார்க்கும் பல வீட்டு மாமியார்கள் தன் மருமகள் மேல் காரணம் இல்லாமல் ஒரு வித காழ்புணர்வு கொண்டிருப்பாள். அம்மருமகள் நல்லவளாக இருந்தாலும் ஒரு மாதிரி வெறுப்பது போலதான் இருக்கும். (மாமியார், மருமகள் உறவில் உள்ள உரசல், விரிசல் ஏற்படுவது எல்லாம் இப்படிதான். இது உண்மையும் கூட) அதே அந்த மாமியார் சிரியல்ல வர மாமியார், மருமகளை கொடுமைபடுத்துவதை பார்த்து ரொம்ப வருத்தபடுவார். இது போல மாமியார்களுக்கு சிரியல்லதான் வருத்தம் இருக்கும். நிஜ வாழ்கையில் இருக்காது. இந்த சமுக அவலங்களும் இப்படிதான் இருக்கின்றன. ஒரு கொடுமை நம்ம பக்கத்தில் நடந்தால் அது பெரிதாக தெரியாது. அதுவே பத்திரிகையில் வரும்போது ரொம்ப பதற்றம் அடைவோம். ஏனென்றால் நம்மில் பலபேருக்கு சுயநலமாய் இருந்தோம், வாழ்ந்தோம், செத்தோம் என்ற கணக்கில்தான் வாழ்க்கை ஓடிகொண்டு இருக்கிறது.


முதியோரை பாதுகாக்கும் நடைமுறைகள்:

தமிழகத்தில் முதியோரை பாதுகாக்கும் சட்டம் 2007 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் மூலம் முதன்முதலில் சென்னையை சேர்ந்த ஒருவன் தன் தந்தையை கவனிக்காமல், புறக்கனித்ததால் கைது செய்யப்பட்டான். 2007 ஆண்டு வந்த சட்டம் 2010 -ம் ஆண்டுதான் தண்டனை சட்டமாக ஆனது. அதுவரைக்கும் யாருக்கும் அரசின் தெரியாத சட்டமாகத்தான் இருந்தது. பிள்ளைகளால் ஆதரவற்ற பல முதியவர்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று தெரிந்தும் பயனில்லை ஏனென்றால் பிள்ளை பாசம் உள்ள தகப்பன்கள் இங்கு அதிகம் அவர்கள் முதியோர் இல்லங்களை தான் நாடிசெல்கின்றனர். இதே தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுற்றி உள்ள வட்டாரத்தில் நோய்வாய்ப்பட்ட, கவனிக்க முடியாத முதியவர்களை விஷஊசி போட்டு சாகடிக்கின்றனர். இவை இப்போதுதான் செய்தி ஊடகம் (Media) மூலம் வெளிவந்திருக்கின்றது. இதே போன்று இராமநாதபுரம் மாவட்டத்திலும் முதியவர்களை வேறுவிதமாக கொள்கிறார்கள். மிகவும் வயதானவர்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட்டு இளநீர் தருகிறார்களாம் அப்படி கொடுத்தால் ஜன்னி வந்து இயற்கை மரணமாய் இருக்குமாம். இதை அங்கு "தலைக்ஊற்றுதல்"  என்று  சொல்வார்களாம். இப்படி தெரிந்தே முதியவர்கள் சாகடிக்கபடுகிறார்கள். தெரியாமல் இன்னும் எவ்வளவு கொடுமை நடக்கிறதோ...இவை எல்லாம் கேட்கும்போது, படிக்கும்போதும் சராசரி மனிதனின் மனம் கொலைவெறி பிடித்ததாகத்தான் இருக்கின்றது. கடுமையான சட்டங்கள் மூலம் இவைகளை களையவேண்டும். முதியோர் பாதுகாப்பு சட்டம் தீவரமாக நடைமுறைபடுத்தபட வேண்டும்.


பெற்றோர்களுக்கு, பிள்ளைகளால் உண்டாகும் கவனிப்பு:

முதியோர்களை கவனித்துகொள்வது பிள்ளைகளின் கடமை மற்றும்  பொறுப்பும்கூட ஆனால் இதில் பல பிள்ளைகளின் பொருளாதாரம் பெற்றோர்களை கவனிக்கபடாத சூழ்நிலையில்தான் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு 40 வயதுமேல்தான் பெற்றோர்களை பாதுகாக்கும் நிலை உண்டாகுகிறது. அப்போது பிள்ளைகளுக்கே ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி என்று பல வியாதிகளை கொண்டுள்ளனர். இதில் பெற்றோர்களை கவனிக்கும் பட்சத்தில் பொறுப்புகள் அதிகமாகிறது. இதில் பலபேர் நன்கு படித்துவிட்டு வெளிநாட்டில் வசிக்கிறார்கள். தங்களுடைய பெற்றோரை கவனிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். அந்த காலத்தில் மக்கள் அதிக குழந்தைகளை பெற்றார்கள் ஒரு பிள்ளை பார்கவில்லை என்றால் இன்னொரு பிள்ளை வீட்டில் பெற்றோர்கள் இருக்கலாம். ஆனால் 30 - 40 வருடங்களில் 80% மக்களுக்கு 2 குழந்தைகளே போதும் என்ற நிலை வந்துவிட்டது இது வரவேர்ககுடியதுதான் அதேவேளையில் முதியோர்களையும் ஒதுக்கமுடியாது, இதில் அவர்கள் நலன் முக்கியமாக இருக்கின்றது.  இதுபோன்ற பிரச்சனைகளை மக்களால் விவாதத்திற்கு  எடுத்துகொள்ளபடவேண்டும். அப்போது இதில் பல தீர்வுகள் உண்டாகும் என்றே நினைக்கிறேன்.


முதுமையின் மறுபக்கம்:


முதுமையும், சாவும் வாழ்வின் ஒரு பகுதியாகவே இணைந்து வருகிறது. மனிதனுக்கு 60 வயது மேல் முதுமை தொடர்வதாக நினைக்கவைக்கபடுகிறது.  அது அவர்களுக்கு உண்டாகும் மரண பயம், ஆதரவற்ற நிலை, மறதியின்மையை ஏற்படுத்துகிறது. இதில் தானாகவே சிறுநீர் போகுதல், மலம் கழித்தல் பெண்களுக்கு கருப்பை கிழ்யிருங்குதல், எலும்பு தேய்மானம், புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் ரத்த அழுத்தம், மற்றும் உணவு உட்கொள்ளாமை இப்பிரச்சனைகள் யாவும் முதுமையில் பல பேருக்கு தொடர்வதாக இருக்கின்றன. இப்போது எல்லோருக்கும் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மனிதர்கள் எல்லோரும் 125 வயதுமேல் வாழ்ந்ததாக இல்லை. உலகத்தில் உள்ள மக்கள் தொகை 1999 வருடம் வரை 6 பில்லியனாக இருந்தது. இப்போது அதை தாண்டி செல்கிறது. இவை 2020 ஆண்டு 7.6 பில்லியன் தாண்டும் என்று மக்கள்தொகை புள்ளியல் ஆய்வு கணித்திருக்கின்றது. இவற்றில் கால்பாகம் (23%) 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களாக இருப்பார்கள். அப்போது முதியவர்கள் வாழ்வு இன்னும் கேள்விகுறியாக்கபடும்.    
       

பிரபலமான ஆதரவற்ற முதியவர்கள்:

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷன் அவர்கள் பெற்ற பிள்ளைகள் எதுவும் இல்லாமல் தன் உறவின் பாதுகாப்பில் நம்பிக்கை இல்லாமல் தன் மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார். மற்றொருவர் 1973 ஆண்டு சாகித்ய ஆகாடமி விருது பெற்ற பெண்மணி ராஜம் கிருஷ்ணன். இவர் தமிழகத்தின் மிகசிறந்த எழுத்தாளர் இடதுசாரி சிந்தனை உள்ளவர். 1950 ஆண்டு நியுயார்க் ஹெரால்ட் டிரிபியுன் சர்வதேச விருது பெற்ற தமிழக எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும்.  உப்பு தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து  இவர் எழுதிய "வேருக்கு நீர்தான்" என்ற புத்தகத்திற்காக சாகித்ய ஆகாடமி விருது கிடைத்தது. அவ்வாறு பலவிருதுகள் பெற்ற பெண்மணி உறவுகளால் ஏமாற்றபட்டு அனாதை விடுதியில் அடைக்கலமானார்.


முதியோர் புனர்வாழ்வு:

வளர்ந்த நாடுகளில் முதியவர்கள் பொறுப்பான வேளைகளில் இருப்பார்கள். ஆலோசனை, அறிவுரை சொல்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு 60 வயது கடந்தால் சமுகத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒதுக்கப்படும்  நிலையில்தான் இருக்கிறார்கள். இவை மக்களால் விவாதம் பண்ணவேண்டிய பிரச்சனைகளையும் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. முதியவர்களுக்கு சுகாதாரம், மருத்துவ வசதி, பாதுகாப்பு இருப்பிடம் இது போன்ற தேவைகளை ஆளும் அரசுதான் கவனத்தில் கொள்ளவேண்டும், நிறைவேற்றியும் தரவேண்டும். பின் மக்களுக்கும்  உறவுகளின் முதுமை எனபது என்றும்  பாரமாக இல்லாமல் இருக்கவேண்டும். இதை நல்ல உள்ளங்களும்  ஏற்பார்கள்...என்றே நினைக்கிறேன்.
  
  

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!என்றும் நட்புடன்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை  தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல்  குத்தவும்.)

30 comments: