Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Tuesday, March 8, 2016

ஒரு இனத்தின் குமுறல்..


                  மலைவாழ் பகுதியான எங்கள் கிராமம் இயற்கை அழகுடன் அநேக வளங்களைப் பெற்று மிக அழகாக காட்சி அளித்தது. எங்கள் கிராமத்தில் இருந்து நகராட்சிக்கு செல்ல ஐந்து கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும். எங்கள் கிராமம் சார்ந்த மக்கள் அன்புடன், பாசத்துடன்தான் வாழ்ந்தார்கள். அவரவர் சாதிக்குள்ளே...!

                 சாதித் துவேஷம் மற்ற பகுதியை விட எங்கள் கிராமத்தில் அதிகம் இருந்தது. அங்கு இன்னும் நிலவுடமை ஆதிக்கம்தான். அது ஆதிக்க சாதிகாரர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. தலைமுறை, தலைமுறையாக ஒடுக்கப்பட்டும், நசுக்கப்பட்டும் வாழும் சாதி  எங்கள் சாதி. சூத்திரன் என்று வருணாசிரமத்தால் அழைக்கப்பட்ட பஞ்சமர்கள். எங்களுக்குள் அரசியல் அந்தஸ்து எவ்வளவு ஏற்பட்டாலும் இன்னும் ஆதிக்கசாதியின் பிடியில்தான் வாழ்கிறோம். இந்நாட்டில் தீணடாமை ஒழிப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற பல சட்டங்கள், எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தும் நாங்க ஒருவித பாதுகாப்பின்மையைத்தான் உணர்கிறோம். இந்திய அரசியலமைப்படி அனைவரும் சமம் என்பதை ஏற்க மறுக்கும் ஆதிக்க சாதித்துவம் இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.     

                    என் இளமைக்கால அனுபவம் மிக கசப்பான நினைவுகளைக் கொண்டது. அது என் நெஞ்சில் இன்றும் நெருஞ்சி முள்ளாய், குத்திக் கொண்டுதான் இருக்கிறது. எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். நானும், அவளும் அங்கிருந்த ஊராட்சி பள்ளியில்தான் படித்தோம். பள்ளியில் மற்ற சாதிகாரங்க பிள்ளைகள் எங்களுடன் சேரமாட்டார்கள். “இவன் அந்த சாதிகார பையன் அவனுடன் சேராதே..” என்று அவர்களின் அம்மா சொல்லிவைத்துவிடுவார்கள்.

        ஆசிரியர்கள் எங்களைத் திட்டும்போது எங்க சாதிப் பேரைச் சொல்லித்தான் திட்டுவார். எங்களுக்கென்றே பள்ளியில் தனியாக ஒதுக்கப்பட்ட இடம் இருக்கும். மதிய சத்துணவிலும் எங்களுக்கென்று தனியாகத் தட்டு இருக்கும். இவையேல்லாம் எதனால் என்று அதிகம் அறியாத பருவம், இருந்தும் மற்ற பிள்ளைகள் நம்முடன் விளையாட வரவில்லையே என்ற ஏக்கம் மட்டும் இருக்கும்.

                  எங்கப்பா நகராட்சியில் துப்புரவு பணியாளர், காலையிலே வேலைக்கு கிளம்பிவிடுவார். சைக்கிளில்தான் செல்வார், வழியில் உயர் சாதிகாரங்கள பார்த்தா, சைக்கிளை விட்டு கிழே இறங்கி தள்ளிக் கொண்டுப் போவார். நான் கூட அவருடன் சைக்கிளில் போயிருக்கிறேன். அப்போது என்னையும் இறக்கிவிட்டு, நடக்க வைத்துதான் கூட்டிப் போவார். அவர்களை பார்த்து வணக்கம் சாமி என்பார். ஆனால் அவர்கள் அதை கண்டுக் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் என் அப்பாவை விட வயதில் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் எல்லோரையும் சாமி என்றுதான் சொல்லனும், அது அவர்களின் ஆதிக்க சட்டம்.     

                     என் அப்பா, நகராட்சியில் குறைந்த ஊதியத்திலே பணிச் செய்தார். அப்பணியில் அவருக்கு சரியான பாதுகாப்புக் கூட இருக்காது. எங்க அப்பாவின் வேலை, சாக்கடையை சுத்தம் செய்வது, தெருப் பெருக்குவது, பீயை அள்ளுவது, ஆமா, அப்பா, பீயை அள்ளி ட்ரம்மில் கொட்டி ஊர்கோடியில் உள்ள நகராட்சி குப்பைத் தொட்டியில் போய் வழித்து கொட்டுவார்.  பின் பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது, அவர் மேல் பீ நாற்றம் வரும். அந்த நாற்றம் போகவே அவர், பலநேரம் குடித்துவிட்டு வருவார். அந்த சாராய நாற்றத்தைவிட பீ நாற்றமே, அவர் அறியாமல் வீசும்.     

                பீ என்றாலே முகம் சுளிக்கும் மக்கள், ஆனா, அதைதான் காலம் காலமாய் எங்க சாதி சனங்க, ஆதிக்கச் சாதியால் கட்டாயமாக தினிக்கப்பட்ட தொழிலாக செய்துக்கொண்டு வருகிறார்கள். அந்த தொழிலுக்கு இந்துமத சார்புடையவர்கள் புனிதமான தொழில் என்று வேற சொல்லி, இன்னும் எங்களை அடிமைப்படுத்த முயல்கிறார்கள்.

                ஊருக்கு வெளியே தென்கிழக்கு திசைப்பக்கம் புறம்போக்கு பகுதிதான் அனேகமாக நாங்கள் வாழும் இடம். எங்களுக்கு முன்னே பெரிய காலனி இருக்கும்.  அது பறையர்கள் வசிக்கும் இடம். அவங்க வீடு, அம்பதுக்கு மேல இருக்கும் எங்க சனங்க வீடு, ஒரு இருபது இருக்கும். நாங்க வசிக்கும் பகுதியை புறாகுட்டை என்பார்கள்.

                 தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்றும், மேற்கே இருந்து வீசும் கொண்டல் காற்றும், வடக்கே இருந்து வீசும் வாடைக் காற்றும் அந்த உயர் சாதி மக்களை தொட்டுவிட்டுதான் எங்களை தொடவேண்டு, அதே காற்று எங்களை தொட்டு அவர்களைத் தொட்டால் அக்காற்றுக்கூடத்
தீட்டுப்பட்டுவிடுமாம் அதனால் அநேக எங்கள் மக்கள் வாழும் பகுதி, தென்கிழக்கு பக்கமாகத்தான் இருக்கும்.
                                              
                 ஆதிக்கசாதிகாரங்க வீடு, 200 மேல் இருக்கும். அவங்க வீட்டு வேலையேல்லாம் நாங்கதான் செய்வோம். அவங்க வீட்டில் பீ அள்ளுவது, ஆடு,மாடுகளை மேய்ப்பது, அவங்க வீட்டில் சாவு ஏற்பட்டால், சாவு செய்தி சொல்வது, செத்தமாட்டை தூக்குவது மற்றும் அவங்க நிலத்தில் விவசாய வேலை எல்லாம் செய்வது எங்கள் இன மக்கள்தான்.

                 எங்கம்மா, என்னை சில நேரம் அவங்களுடன் வேலைக்கும் கூட்டிச் செல்வார். மேல் சாதிகாரங்க வீட்டருகில் சென்றதும். என்னை, அங்க இருக்கிற கல்லுமேல உட்கார வைத்து,

      எங்கையும் போகாதே.. இங்கையே இரு, யாருகிட்டயும் எதுவும் கேட்க கூடாது. அம்மா, பீ அள்ளாத்தையும், வாரிட்டு வந்துடுரேன் என்று சொல்லுவார்.

                 அம்மா, அங்கு இருக்கும் பீயை எல்லாம் துடைப்பதால், மண் தள்ளி அதை கூடையில் அள்ளுவாள், அதை கொஞ்சம் தூரம் சென்று, எங்கையோ ஒரு இடத்தில் போய் கொட்டுவாள். நேரம் ஆகிக்கொண்டிருக்கும், எனக்கு பசி எடுத்துகொள்ளும்.

    அம்மா பசிக்குதும்மா..” என்பேன். என் அம்மா,

         இதோ நைனா வேலையை மூடிச்சிட்டேன், சோறு வாங்கிதரேன்.” என்று சொல்லி அங்கு செடிகளுக்கு மறைவிடத்தில் வைத்திருந்த தட்டு ஒன்று இருக்கும், அதைத் தன் முந்தானையில் துடைத்துவிட்டு, அந்த வீட்டின் முன்,

    அம்மா... அம்மா என்பாள்.

    அந்த வீட்டுகாரர் வருவார்,

    அம்மா வேலையா இருக்காங்க.. சோறு ஆகிடும் இரு என்பார்.

     அவர் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே கேட்பார்.
     
மாதாரிகளுக்கு எதுக்கு மதிய சாப்பாடு, இப்பா எல்லாம் மதிய சாப்பாடு சாப்பிட ஆரம்பிச்சிடிங்களா...” என்று எங்க சாதி பெயரை குறிப்பிட்டு நக்கலுடன் சொல்வார்.
                                              
                  அந்த நக்கல் பேச்சில் எங்கம்மா கூனிக் குருகி போவாள். நேரம் ஆகிக்கொண்டிருக்கும் சாப்பாடு வராது.

      அம்மா ரொம்ப பசிக்குதும்மா..” என்பேன்.

     இரு நைனா, டீ கடைல டீயும், பிஸ்கோத்தும் வாங்கி தரேன்.” என்று சொல்லுவாள். 

               டீ கடையை நோக்கி நாங்க செல்வோம். டீக்கடைகாரர் ஏறிட்டு எங்களைப் பார்பார், எங்க தோற்றம், அவருக்கு புரிந்துவிடும்.

     ஏய், அங்கே இருக்கிற கொட்டாங்குச்சிய எடுத்துக்கோ..” என்பார்.

                  எங்க சாதிக்காரங்க சாப்பிடுவதற்க்கென்றே அங்கு நிறைய கொட்டாங்குச்சிகள் இருக்கும். அதில் ஒன்றை எடுத்து டீ வாங்குவாள். பிஸ்கேட்டை தரையில் வைப்பார்கள். அதை எங்கம்மா எடுத்து, அதை எனக்கு, டியில் தொட்டு ஊட்டுவாள்.

                  எங்க சனங்க காச நோயில் அவதிப்படுவாங்க... சரியான மருத்துவமும் இருக்காது. எங்க அப்பாவுக்கு அந்த நோய் இருந்தது. அவர் வலியினால் ரொம்ப அவதிப்படுவார். சில நேரம் எங்க அப்பா, என் அம்மாவிடம்,

            இவன் என்னத்த படிச்சு கிழிக்க போறான் பேசாம.. என் கூட பீவார அனுப்பு தொழில் கத்துகிட்டும் என்பார்.

              எங்கம்மாவுக்கு வருமே கோவம், அவங்க பக்கத்தில் இருக்கும் பாத்திரத்தை அவர் மேல் தூக்கி எரிவார்.

      பையன் படிக்கும் படிப்ப, பாழ் படுத்திரியா.. என் பையன் படிச்சு, பெரிய ஆபிசரா வருவான்.” என்று துடிப்புடன் சொல்வாள்.


             நானும் எங்கம்மா ஆசையை நிறைவேற்றவே மனதில் துடிப்புடன் படித்தேன்.

              எங்க மக்கள் தெலுங்கும், கன்னடமும் பேசுவார்கள். மாதாவி, சக்கிலி, தோட்டி என்று இன்னும் பல பெயர் சொல்லி எங்களை அழைப்பார்கள். ஆனால் எங்களை அருந்ததி என்று அழைக்கவே நாங்க விரும்புறோம். புராண காலத்தில் வசிஷ்டரின் மனைவி பெயர் அருந்ததி, அவளுக்கு 100 பிள்ளைகள் அதில் ஒரு பிள்ளை துறவியாகிப் போக மீதி 99 பிள்ளைகளும் கல்யாணம் கட்டிக்கொண்டு குடும்பமாய் வாழ்ந்தது. அவர்கள் வழி வந்தவர்கள்தான் நாங்கள், நாயக்கர் ஆட்சியில் தமிழகதிற்கு வந்து குடியேரியவர்கள். அது போல், மைசூர் அரசில் இருந்தும் வந்தவர்கள்.

                  நாயக்கர் ஆட்சியில் பாலங்கள், அணைகளைக் கட்ட எங்க ஆளுங்களை சிறையில் அடைத்து, பின் நரபலி கொடுப்பாங்களாம்..  எங்களைச் சக்கிலி என்பார்கள். இதில் கிலி என்பது பயம் ஆகும். பயப்படுபவனே சக்கிலியாம் ஆனால் எங்கள் வீரம், திட்டமிட்டே வரலாற்றில் பக்கதில் இருந்து மறைக்கபட்டிருக்கு, புலிதேவன் படையில் ஒண்டிவீரன் என்பவன், ஒத்தை ஆளாய் போய் வெள்ளையன் படை முகாமை தகர்தவன். ஒண்டியாப் போய் எதிர்ததால் அவனை எல்லோரும் ஒண்டிவீரன் என்றார்கள். மதுரைவீரன் எங்க இனத்தை சேர்ந்தவன்தான்.

                 கட்டபொம்மன், ஊமைத்துரை படையிலும் சிறந்த தளபதிகளாக இருந்த முத்தன் பகடை, பொட்டிப் பகடை, கந்தன் பகடை இவர்கள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்புரிந்தவர்கள் ஆனால் இப்படி வீரம் நிறைந்த எங்கள் இனத்தவர்களை பயந்தவர்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை... திட்டமிட்டே ஆதிக்க சாதியால் எங்கள் வரலாற்றின் பங்களிப்பை மறைத்தார்கள். அப்படி வீரர்களாக இருந்தோம். இப்போது செய்யும் தொழிலை வைத்து இழிமக்களாய், பஞ்சமர்களாய் நாங்கள் ஒதுக்கப்பட்டோம்.

               நான் இந்த இழிநிலையிலேதான் வளர்ந்தேன். என் ஆரம்ப பள்ளிக்காலத்தில் இருந்தே என் கூட படித்த நண்பன் முனீஸ்வரன், அவன் பொதுவுடமை சிந்தனை அதிகம் கொண்டவன், அதைப் பற்றி என்னுடன் விவாதிப்பான்.

                   மலைக்கு அந்தபக்கம் ஒரு போரட்டம் குழு இயங்கி வந்தது. அது ஊருக்குள் எப்பாவது வந்துவிட்டு போகும், அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள். என் நண்பன் அவர்களுக்கு நல்ல பரிச்சயம். ஊருக்குள் அவர்கள் வந்துப்போவதை கேள்விப்பட்டு, போலிஸ் அடிக்கடி வந்துவிட்டு போகும். வண்டாரியிடம் எச்சரிக்கை செய்துவிட்டு போகும். அவரும்

      சாமி எங்க பசங்க யாரும்.. அவங்க கூட இல்ல என்பார்.

              அன்று ஒருநாள் வண்டாரி, ஒரு செய்தி சொன்னார்.

     நம்ம இருக்கும் இடத்தை அரசாங்கம் ஏதோ திட்டத்துக்கு பயன்படுத்த போறாங்கலாம்.... இங்க ஏதோ மண்ணுல புதையல் இருக்காம். அதை தோண்டி எடுக்க போறாங்கலாம். இது புறம்போக்கு இடமாம், அதனால் மலை ஒதுக்குபுறமா போங்க... என்கிறாங்க அவர் சொன்னதை கேட்டதும் நாங்க திடுக்கிட்டோம்.

                 என் நண்பன், அது எப்படி இங்க இருந்து போக முடியும்.? முடியாது என்றான்.

                  இந்த பிரச்னைகளுக்கு இடையே என் தங்கையின் பிரச்சனை, அவள் காலணிக்காரன் ஒருத்தனைக் காதலித்திருக்கா.. என் தங்கையை கல்யாணம் கட்டிகிக்றேன்னு அவன் சொல்லிருக்கான், அவன் பேச்சை நம்பி என் தங்கை அவனிடம் அவளை, ஒப்படிச்சிருக்கா... இதை தெரிந்து நான் கொதிச்சுப்போனேன். அவனிடம்,

      என் தங்கையை திருமணம் செய்து கொள் என்றேன். ஆனால் அவன், சொன்னான்.

      பறையங்க, நாங்க என்னைக்குடா உங்க சக்கிலி பொண்ணுங்கல கல்லாணம் பன்னிருக்கோம், அவ, ஆசைக்கு என்னை பயன்படுத்திகின்னா நான் என்ன பன்னுவேன் என்று அவன் சொல்லும் போதே..

                  நான், அவன் முகத்தில் ஓங்கி அடிச்சேன். அவன் நிலைக்குலைந்து கீழே விழுந்தான். அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது.

      ஏய், நான் சும்மா விடமாட்டேண்டா...” என்றுச் சொல்லி வந்துவிட்டேன். இந்த பிரச்சனை அம்மாவுக்கும், அப்பாவுக்கும் தெரியாது. 

       மறுநாள் அந்த ஆதிக்க சாதிகாரங்க, அரசு கிட்ட இருந்து டெண்டர் மூலம் எங்க இடத்தை எடுத்துருக்காங்க. எங்க ஆளுங்க அந்த சாதிகாரங்ககிட்ட வட்டிக்கு பணம் வாங்கிருக்காங்க.. அது கந்துவட்டி, இன்னும் அவங்க அதைக் கட்ட முடியாம, அவன் பண்ணையில் அடிமையாகத்தான் வேலை செய்றாங்க...

      டென்டர் மூலம் எங்க இடத்த வாங்கினதால.. அவங்க வாங்கின பணத்திற்கு அசலும், வட்டியும் வேண்டாம் என்று சொல்லி, அதுக்கு பதிலா வெத்து பேப்பரில் எல்லோரிடமும் கைநாட்டு வாங்கிருக்காங்க...  நானும், என் நண்பனும்தான் பிடிவாதமாக இருந்தோம். போலிஸ் ஆதருவுடன் அவன், எங்களை மிரட்ட ஆரம்பித்தான். நாங்க இதைக் கேட்க, அவன் வீட்டுக்கு போனோம். அங்கே, என் தங்கையை காதலித்தவனும் இருந்தான். அவன் அந்த சாதிகாரனுக்கு அடியாளாய், அவன் பின்னே நின்றுக்கொண்டிருந்தான். நான், கேட்டேன்.

      ஏங்க, எதுகுங்க நாங்க இருக்கும் இடத்தை விட்டு போகனும் என்றேன்.

               அவன் சொன்னான்:

           ஏய் என்ன நீ, வாங்க போங்கன்னு சொல்ர, சாமின்னு சொல்லுடா, ...ம்ம், சக்கிலி பசங்க  இப்போ என்கிட்ட நேருக்கு நேரா பார்த்துப் பேசர அளவுக்கு தைரியம் வந்துடுச்சா.. பறப்பசங்கள விட உங்களுக்கு ரொம்ப தீமிருடா..” என்றான்.

                 அப்படி அவன் சொன்னதும், அவன், பின்னே நின்ற காலணி ஆளு,

          சாமி, எங்கள அவனுங்களுட சேர்காதிங்க.. நாங்க அவனுங்கள விட உசந்தவங்க..” என்றான்.

      இதோ பாருடா... இவனுங்க ரோசத்தஇவனுங்களே நமக்கு அடிமை, இவனுங்களுக்கே சக்கிலிங்க அடிமையா.. இந்தக் கூத்து நல்லாருக்குடா...” என்றான்.

    
            இவன், எங்களை அடிமை என்கிறான். இவன் இன்னும் பாப்பாமார்களுக்கு அடிமையாகத்தானே இருக்கான். அவங்க மனுசாஸ்திரத்தில் பிராமணரைத் தவிர பிற சாதிகள் எல்லாம் சூத்திரர்கள் என்றுதானே சொல்கிறது. இதிலே இவன் நம்மை அடிமை என்கிறானே.” என்று நான் முனுமுனுப்பதை, அவன், கவனித்துவிட்டான்.  நான் அவனை திட்டுகிறேன் என நினைத்து, என்னை அடித்தான். தடுக்க வந்த என் நண்பனையும் அடித்தான். நாங்க வலிதாங்காமல் அப்படியே தரையில் சுருண்டு விழுந்தோம். பின் அவன் அடியாள்கள் எங்கள் கைகளை இருக்கக் கட்டினார்கள், கால்களும் கட்டப்பட்டது. தோள்களை பிடித்து அழுத்தினார்கள். அப்படியே நாங்கள் முட்டிப் போட்டு மடக்கி உட்கார்ந்தோம்.

               நாங்க எவ்வளவோ திமிரியும் அவர்கள் எங்களை விடவில்லை.

            நாயுக்கு பொறந்த பசங்களா... என்னையே திட்டறிங்களா.. ஏய், அதை எடுத்து வந்து, இவனுங்க வாயில ஊத்துடா.. பீயை அள்ளுரவனுங்க, அதையே குடிக்கட்டும்.” என்றான்.

               அவன் சொன்னதும், அவனின் அடியாள், என் நண்பனின் வாயைத்  திறந்து, தீனித்து ஊற்ற முற்பட்டான். என் நண்பன் அதை முகத்தாலே தட்டிவிட்டான்.

     ஓ அவ்வளவு வீரமானவனுங்களா... ஏய், அவனுங்க மேல மூத்திரத்த அடிங்கடா...” என்றான்.

          அந்த போலிஸ் அதிகாரியும் அங்கேதான் இருந்தான்.

            அந்த சாதிகாரனுக்கு அவன் உடந்தையாகதான் செயலபட்டான். நீதி அங்கு செத்துவிட்டது.

            அந்த போலிஸ் அதிகாரி சொன்னான்:

     ஏய், அந்த மலையில இருக்குற ஆளுங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்குன்னு, தீவரவாதி தடுப்பு பிரிவுல, தூக்கி உள்ளே போட்டுவிடுவேன். மரியாதையா ஊரை காலி பண்ணிட்டு போயிடுங்க.. வன்முறை செய்தால், நீங்க இல்லாமல் போயிடுவிங்க..” என்றான்.

என் நண்பன் சொன்னான்:
                                              
      நீங்க அடிச்சா வன்முறை இல்ல, அதையே நாங்க திருப்பி அடிச்சா வன்முறையா...? நாங்க வன்முறையாளன் என்றால், எங்களை முதலில் அடிச்ச நீங்க வன்முறையாளன் இல்லையா...? ஆனா, இந்த ஜனநாயாக நாட்டில், எங்களுக்கு மட்டும் தண்டனை. இது என்ன நியாயம்.?
இந்த ஜனநாயக நாட்டில் வலிமை உள்ளவன் வாழலாம், அவனிடம் அடங்கி போகிறவன் வாழலாம் ஆனால், அடங்கியும் போகாமல், எந்த வலிமையும் இல்லாமல் வாழும் எங்களை, தீவிரவாதி என்கிறீங்க...

      …! இவன் பொதுவுடமை பேசுராண்டா.. சக்கிலி பசங்கக் கூட,  இப்ப பொதுவுடமை பேச ஆரம்பிச்சிடிங்களா.. ஏய், இங்க நாங்க சொல்லுறதுதான் பொதுவுடைமை, அதுதான் எங்க உடமை, இன்னும் இரண்டு நாள்ல டைம் தரோம் அந்த இடத்தை விட்டு காலி செய்தாகனும், இல்லன்னா எவனும் உயிருடன் இருக்கமாட்டிங்க...” என்று மிரட்டினான். அந்த காவல் அதிகாரி.

                விசயம் கேள்விப்பட்டு எங்கம்மா அங்கு வந்துடாங்க,

     ஐயா சாமி, எங்க புள்ளைங்கல விட்டுங்க..” என்று அவன் காலை பிடிக்க போனாங்க. அவன்,

ஏய், ...ச்சி காலை பிடிக்காதடி தீட்டுப்படபோது தள்ளிப்போ...” என்று விரட்டினான். நான்,

அம்மா, அவங்க கால்ல விழாதிங்கம்மா...” என்று கத்தினேன்.

     நாங்க பேன்ட பீ அள்ளுர நாயுங்க.. எங்க கால்ல விழுவது உங்களுக்கு அவ்வளவு கௌருவ குரைச்சலா...” என்றுச் சொல்லி அவன், எங்க அம்மாவை பார்த்து சொன்னான்.

           ஏய், தள்ளினின்னு என்கால் விழுடி... இல்லேன்ன உன் மவன இங்கையே சாகடச்சுடுவேன்.” என்றான்.

                என் அம்மா மறுபடியும் விழப் போனாள். நான் கத்தினேன்,


       அம்மா அவங்க கால்ல விழாதிங்கம்மா, அதுக்கு உன் கையால என்னை சாகடிச்சுடும்மா..” என்று கதறினேன். இருந்தும் அம்மா அவன் காலில் விழுந்தாள்.

கற்றுகள் கழற்றிவிடப்பட்டது.
                                              
     இன்னும் இரண்டு நாள்ள காலிபண்றிங்க..” என்று எச்சரிக்கைச் செய்து எங்களை அனுப்பினான்.

                அன்று இரவே என் நண்பனை காணவில்லை. பொழுது விடிந்தது. என் நண்பன் அந்த மலை மேல் இருந்த போராட்ட குழுவுடன் இணைந்துக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன். அன்று சாயந்திரம் என் வீட்டு கதவை யாரோ, தட்டும் சத்தம் கேட்டது. போய் திறந்தேன். அங்கு என் நண்பன், அவன் கையில் ஒரு இயந்திர துப்பாக்கி இருந்தது.

              அவன் சொன்னான்:

     இதுக்கு மேல் நாம பொறுமையாக இருந்தால் நாம் வாழ்வதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஆயுத போராட்டத்தை வச்சுதான் அடக்குமுறைக்கு முடிவு கட்டியாகவேண்டும். நீயும் என்னிடம் வந்துவிடு, இந்தா.. இதை எடுத்துக் கொண்டு நாளை மலைபக்கம் வா, நான் உனக்காக காத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு, துப்பாக்கியை அங்கிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு சென்றான்.

                 அதன் அருகில் நோட்டுப் புத்தகம், அதன் மேல் ஒரு பேனா இருந்தது.

       ஒரு கணம் என் மனம் துப்பாக்கியே பார்த்துக் கொண்டிருந்தது. நான் எடுத்தேன்.

பேனாவை..!

               ஆம், பேனா என்ற ஆயுதம் இன்னும் உலகத்தில் தோற்றுப் போய்விடவில்லை. துப்பாக்கியை விட பலம் வாய்ந்தது என்பதை உணர்ந்தேன். அங்கு இருந்த நோட்டில், நான் எழுத துவங்கினேன்.

      ஒரு இனத்தின் குமுறல்  என தலைப்பிட்டு...!  





நட்புடன்: