Pages

Saturday, August 27, 2016

எந்த வேலையும் இங்கு இரண்டாம்தரமான வேலை இல்லை..


இந்தியாவில்தான் கரைபடியாத வேலை செய்யனும்ன்னு ரொம்ப பேர் ஆசைபடுவாங்க இதை ஆங்கிலத்தில் "white collar job" என்று சொல்லுவாங்க.. இதை நாம் லோக்கல் பாஷையில் சொல்லனும்ன்னா, "நோவாம நோம்பு கும்பிடரது, நோவாம நுங்கு உரியுரது" என்பார்கள். எனக்கு ஒரு ஐங்கார் பிரமாணன் நண்பன் இருக்கான்.  நான் அவங்க வீட்டிற்கு செல்வேன். அவங்க அம்மா நன்றாக என்னிடம் பேசுவாங்க.. அவங்க தன் மகனை பற்றி பேசும்போது, " நாங்க எல்லாம் ஃபேன் காத்து கீழே வேலை செய்தவங்கப்பா... இவன் என்னடான்னா படிப்ப ஒழுங்கா படிக்காம மார்கெட்டிங் வேலை செய்ரான்." என்றார்.  நான் அமைதியாக கேட்டுகொண்டேன். அவர்கள் பேசிய பேச்சில் சாதிய அடையாள தீமிர் பேச்சு இருந்தது. "நாங்களேல்லாம் அப்படி, நீங்க இப்படிதான்" என்று. இப்படி பேசுவது எல்லாம் பொதுவாக சாதி அடிபடையிலும், இன அடிப்படையிலும், நிற அடிபடையிலும்தான் நடக்கும்.

நான் பொதுவாக எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன் கௌருவம் எல்லாம் பார்க்க மாட்டேன். எனக்கு கட்டிட வேலையான கொத்தனார், பெரியாள் வேலை செய்வேன். பிளம்பிங் வேலை தெரியும், பெயின்ட் வேலையும் தெரியும். எங்கவீட்டுக்கு எல்லாம் பெயின்ட் நான்தான் அடிப்பேன். கொஞ்சம் கார்பென்டர் வேலை, கொஞ்சம் எலட்ரிஷ்யன் வேலையும் பார்பேன். பேன், டியுப் லைட் மாட்டுவது மற்றும் ஒயிரிங் லைன் கனெக்க்ஷன் மாற்றிகொடுப்பது எல்லாம் தெரியும். கடைகியாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் ட்ரைனேஜ்ல இறங்கி கழிவு அடைப்பும் எடுப்பேன்.

அன்று ஒருநாள் அப்படிதான் சைதாப்பேட்டை குடித்தனம் இருக்கும் வீட்டில் கக்குஸ் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. அதை என்னிடம் சொன்னாங்க நான் போய் கழிநீர் அலுவலகத்தில் எழுதிகொடுத்துட்டு வந்தேன். ஆனால் "பின்னாடியே வரேன் போங்க..." என்று சொன்னவங்க வரவில்லை மறுநாள் அரசு விடுமுறை அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை ஆனால் சனிக்கிழமையே ட்ரைனேஜ் தொட்டி நிரம்பி பொங்கி வழிந்து விட்டது, சரி இதுக்குமேல பார்த்தால் வீடு நாறிடும் என்றேண்ணி தொட்டியில் இறங்கி பட்டையான ஒரு மூங்கில் குச்சியை எடுத்து உள்ளேவிட்டேன். அது கொஞ்ச தூரம் சென்றதும் அங்கு ஏதோ தட்டுபட்டுச்சு.. நல்லா அழுத்தி குத்தியவுடன் கோணிப்பை அடைத்துகொண்டிருந்தது. அதுனுடன் சேர்ந்து தலைமுடி மற்றும் பல சத்தைகள், மனித கழிவு அப்படியே அடித்துகொண்டு வந்தது. நான் கையில் பாலித்தின் கவர் போட்டுகொண்டு வெளியே அக்கழிவை வாரி கொட்டினேன். இதுல ஒரு கொடுமை என்னவென்றால் அதுவரை வேடிக்கை பார்த்த கொண்டிருந்த எங்கவீட்டு கோஷ்டிங்க, அக்கழிவை வாரிகொட்டியதும் "..ச்சீசீ" என்று மூக்கை பொத்திகொண்டு விலகி ஓடியது. அப்புறம் நான் வெளியே வந்து துடைப்பம் எடுத்து அந்த இடத்தை துத்தமாக கழுவிவிட்டேன். பின்பு என்னை நான் தண்ணீரால் சுத்தபடுத்திகொண்டு, எங்க குடித்தனம் இருந்த பெண்ணிடம், "கொஞ்சம் குடிக்க தண்ணி கொடும்மா.." என்றேன். அவங்க என்னிடம் தண்ணீர் கொடுக்க அப்படி ஒரு தயக்கம்காட்டினாங்க.. அவங்க பாத்திரத்தை என் கையில் கொடுக்க அவ்வளவு அருவெருப்பு இருந்தது. அது அவங்க முகத்திலே நன்றாகவே தெரிந்தது. இதெல்லாம் என் மனைவிக்கும் தெரியும். அன்று மட்டும் நான் அப்படியே விட்டிருந்தால் வீடே நாறிபோயிருக்கும்...

திங்கரவரைக்கும்தான் சோறு, அது தொண்ட குழி இறங்கியது மலம். அது வயிற்றுல எத்தனை மணி நேரம் தம்கட்டி இருந்தாலும் அசிங்கம் இல்லையாம் ஆனால் வெளியே வந்தால் ..ச்சீயாம். விலகி ஓடுதுங்க கழுதைங்க... நான் அதுனுடன் அருகில் இருக்க சொல்லவில்லை. அது கழிவுதான், அசுத்தம்தான் அதனால் நோய்தொற்று அதிகம் உண்டாகும். அவைகள் அகற்றபடவேண்டியதுதான். ஆனால் அதை அகற்றும் ஊழியர்களின் நிலையை நாம் நினைத்து பார்க்க மறந்துவிடுகிறோம். இன்னாட்டில்தான் இன்னும் மனித கழிவுகளை மனித அகற்றும் கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது. 


 இந்த நாட்டில்தான் இதுபோல் கொடுமை எல்லாம்... ஜப்பானில் பள்ளி குழந்தைகளே தான் பயன்படுத்தும் கழிவரையை தானே எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்று பள்ளி நிர்வாகமே சொல்லிகொடுக்கிறது மற்றும் அதற்கென்றே ஒரு வகுப்பே இருக்கிறது. உலகத்திலே ஜப்பான் போல சுத்தமான நாட்டை எங்கும் பார்க்க முடியாது. அப்படி ஒரு சுத்தம் அங்கு. ஆனால் இந்தியாவில் சுத்தம் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள். "எவனாவது சுத்தம் செய்யட்டும், நாம் நோவாம போயிட்டு வந்துடலாம்.." என்று  நினைக்கிறார்கள். இதோ நம்ம பக்கத்து நாடான சீனாவை எடுத்துகொண்டால் அங்கு கக்கூஸ் கழுவுரவனும் அவனுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் ஒரே டேபிளில் உட்கார்ந்து டீ அருந்துவார்கள். அங்கு, "இவன் கக்கூஸ் கழுவுரவனாச்சே.. நாம முதலாளியாச்சே" என்ற பாகுபாடு இருக்காது. அதுதான் பொதுவுடமை சித்தாந்தத்தின் அடிபடை மரபு,. அதுதான் உண்மையான சமத்துவம், சகோதரத்துவம். அதுதான் நானும் இங்கு எதிர்பார்பது. ஆனா இங்குதான் அந்த வேலை செய்ரவங்கள தோட்டி, சக்கிலி என்று சாதி அடையாளம் கொடுத்து அழைகிறார்கள் மற்றும் ஒதுக்கி வைகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான் என்ற எண்ணம் இல்லை. அவர்களும் பல்வேறு போராட்டங்களின் மூலம்தான் அரசிடம் இருந்து பெறமுடிகிறது. ஆனால் மக்களின் மனங்களோ இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றது.

இதெல்லாம் நான் எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால், "எந்த வேலையும் இங்கு கீழ்தரமான, இரண்டாம்தரமான வேலை இல்லை. எல்லோரும் இங்கு சமம், செய்யும் தொழிலில் ஏற்ற தாழ்வு பார்க்ககூடாது. அப்படி பார்த்தால் அதைவிட கொடுமை வேறெதுவும் இருக்காது. அப்படி பார்க்கும் மனநிலை இருந்தால் அவர்கள் படித்த படிப்பை எல்லாம் தூக்கிகொண்டு போய் குப்பையில் போடவேண்டியதுதான். நாம் மனிதர்களை படிக்கனும், மனித மனங்களை படிக்கனும், எந்த தொழிலாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் செய்யனும். அதுவே உயர் கல்வியின் லட்சணம் மற்றும் அடையாளம். அவர்கள் போன்றவர்களை நான் சிறந்த கல்விமான் என்பேன்.  

இன்னாடு வளர்ச்சி பெற பல மனித தடைகளை கடக்கவேண்டிருக்கு. அப்படியெல்லாம் கடந்தால்தான் இன்னாடு முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். உண்மை வல்லரசு கனவு, நனவாகும்.  நன்றி..!
 
நட்புடன்:   
Rk.Guru

1 comments: