Pages

Friday, July 1, 2016

சுவாதிக்கு நடந்த அந்த கடைசி நொடி..!?

இனிமேல் எழுத கூடாது என்றுதான் நினைத்தேன் ஆனால் நிகழ்வுகள் என்னை எழுத தூண்டுகின்றன. சில நாட்கள் முன் புலம்பெயர்ந்த கனடா நாட்டு ஈழ சகோதரி கயல் என்பவள் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, "அண்ணா, தாங்கள் எழுதுவதை ஏனண்ணா  நிறுத்திவிட்டீர்கள். நான் ஒவ்வொரு நாளும் தங்கள் பதிவுகள் ஏதாவது வந்திருக்கிறதா... என்று உங்கள் முகநூல் பக்கத்திலும், தங்கள் வலைபக்கத்திலும் பார்ப்பேன் ஆனால் தாங்கள் கடைசியாக எழுதிய பதிவே இருக்கிறது. எங்க மேல் ஏனண்ணா கோவம்.. .தொடர்ந்து எழுதுங்கோண்ணா..." என்றாள். "எனக்கு கோவம் எல்லாம் இல்லம்மா ஒருவித ஆதங்கம் அவ்வளவே நான் தொடர்ந்து எழுதுரம்மா..." என்றேன்

எனக்கு அந்த ஆதங்கத்தின் வெளிபாடு சமூகத்தின் மேலே நேரடியாக இருந்தது. அது தமிழன் என்ற தனிமனிதன் மேல் தாக்கத்தை உண்டாக்கியது. நம் நாட்டு ஆட்சியாளர்கள் மக்களை சுயமாக சிந்திக்கவிடாமல் அவர்களின் வரட்டு கொள்கையால் பிடித்துவைத்திருகிறார்கள். அரசியல்வியாதிகள் ஒருபக்கம் என்றால் "அத்தனைக்கும் ஆசைப்படு" என்ற பல திருட்டு சாமியார்களும் மற்றும் மத தலைவர்கள் மேலும் கோவம். அக்கோவத்தில் என்னை நான் சமாதானபடுத்திகொண்டாலும் அது என் எழுத்திலே வெளிபடாது அது கோவமாகவே இருக்கும்.. என்னை போன்ற முற்போக்கு எழுத்தாளர்களின் எண்ண போக்கே இப்படிதான் ஏனென்றால் முற்போக்கு எழுத்தாளர்கள் எப்போதும் ஒருபக்க சார்புடையவர்களாக என்றும் இருக்கமாட்டார்கள். அவர்கள் பெரியார் மற்றும் பாரதியின் பிள்ளைகள் துணிந்து எழுதும் திறன் படைத்தவர்கள்.       

பொதுவாக எழுதுவது எல்லோராலும் சாத்தியம் அல்ல.. அதுவும் சிந்திக்கும் சிந்தனையை வார்த்தையில் கொண்டுவருவது, அதை பொருள்பட விளக்குவது எளிதான காரியம் அல்ல.. இலக்கணம் படித்துவிட்டு இலக்கியம் எழுத முடியாது. ஆனால் இலக்கணம் தெரிந்தால் இலக்கியதிற்கு மேலும் ஒரு அழகு. சில  நாட்கள் முன் தீவு திடலில் நடந்த புத்தக கண்காட்சிக்கு நான் போயிருந்தேன். அங்கு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஒரு சிறப்பு பேச்சாளர் பேசுகிறார். "எழுத்து என்பது சாமான்னியபட்ட வேலை அல்ல... எல்லோராலும் எழுதிவிட முடியாது எழுத்து படைப்பின் கலை, அது கடவுள் தந்த வரம். எழுத்தாளர்களை நாம் மதிக்கவேண்டும்" என்றார். அவர் அப்படியேல்லாம் பேசி கொண்டிருக்கும் போது நான் நின்றுகொண்டிருந்தேன் நான் நின்றுகொண்டிருந்த இடத்தில் சில கற்களும் இருந்தது. நான் அதையே பார்த்துகொண்டிருந்தேன். அங்கு அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் அவரின் பேச்சுக்கு கைதட்டினார்கள். ஆனால் நானோ கையைக்கட்டிகொண்டிருந்தேன்.    

ஜெர்மனி போன்ற நாட்டில் எல்லாம் அறிவு சார்ந்த மக்களுக்கு பெருத்த வரவேற்பு இருக்கிறது. அங்கு ஒருவர் வியாபாரி என்றால் அவரை மூன்றாம் தர நபராகதான் கருதுவார்கள். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் எழுத்தாளர்களுக்கு மதிப்பில்லை ஆனால் மிரட்டபடுகிறார்கள், சுட்டுகொல்கிறார்கள்.
என்றைக்கு ஒரு நாடு அறிவார்ந்த மக்களை மதிக்கிறதோ அந்த நாடே சமச்சீர் முன்னேற்றம் அடையும். அங்கு அறம் சொழித்தோங்கும். தவறினால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வக்கரம், வன்முறை வெறியாட்டம் எல்லாம் தலைவிரித்தாடும். சமூகத்தை  நல்வழிபடுத்துவது அரசியல்வாதிகள் கைகளில் இல்லை. அவை அறம் வளர்க்கும் சமூக சிந்தனையாளர்கள் மற்றும்  படைபாளிகளே கைகளே உள்ளது. ஆட்சியாளர்களுக்கு மக்களை முட்டாளாக்குவதிலும் கொள்ளை அடிப்பதிலே நோக்கம் அவர்களுக்கு மக்களை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை.  தற்போது சமூகம் சீர்கெட்டு கொண்டிருக்கிறது. அற சிந்தனையாளர்கள் எல்லாம் ஒன்று சேருங்கள். அறத்தை காக்க வாருங்கள். இல்லையென்றால் நம் வருங்கால தலைமுறையை நாமே தவறான வழிக்கு அழித்து சென்றுவிடுவோம் அது தற்போது அழிவான நிலைக்கே அடியெடுத்து வைத்துவிட்டது.

நம் தமிழ் நாட்டில் அறம் வளர்த்த சங்ககால புலவர்களை எந்த நாட்டின் எல்லையும் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. ஏனென்றால் அவர்களின் அறிவார்ந்த அற சிந்தனை அதுபோல். மன்னர்கள் அவர்களை மதித்து வணங்கினார்கள். உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஔவையார், மூவேந்தர்களிடமும் அவர் நட்பு பாரட்டினார். சேர, சோழன், பாண்டியன் என்ற மூன்று மன்னர்களும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்று வலியுருத்தினார். ஆனால் இன்றோ நாட்டில் தலைகீழ் நிலைதான் இருக்கிறது.

இந்தியாவில் அமெரிக்காவின் தாக்கம் அதிகம் ஏற்பட்டுவிட்டது. எல்லாம் நுகர்வோர் கலாச்சாரமாக மாறிவிட்டது. இங்கு மனிதர்களையே பொருட்களாகதான் பார்கிறார்கள். அன்பின் பண்பின் நேசம் போய்விட்டது. எல்லாம் விளம்பர நோக்கமாக மாறிவிட்ட்து.  இங்கு எவனாவது வெட்டிவிட்டு போனால் கூட தடுப்பார் ஆளில்லை.  சமீபத்தில் நடந்த சுவாதி என்ற பெண்ணின் படுகொலை நாம் அனைவரும் அறிந்தது.. இதை நினைத்து நம் தமிழ் சமூகம் வெட்கபடவேண்டும். வெட்டிவிட்டு ஒடியவனை கூட பிடிக்க ஒருவருக்கும் துணிவில்லை அவன் வெட்டிவிட்டு அப்பெண்ணிடம் இருந்து கைப்பேசியை எடுத்துகொண்டு, அவன் வெட்டிய கத்தியை தண்டாவாளத்தில் போட்டுவிட்டு சாதாரணமாக நடந்து சென்றிருக்கிறான். அங்கு ஆண்மை உள்ள ஒரு ஆண்மகனும் இல்லை... "இறந்த பின்னும் ஒருவரின் கண்ணியம் காக்கபடவேண்டும்" என்று இந்திய அரசலமைப்பு நீதி சொல்கிறது. ஆனால் எத்தனை பேர் நீதியின் கண்ணியத்தை காப்பாற்றினார்கள். அப்படுகொலை நடந்து இரண்டு மணி நேரமாகியும் அப்பெண் அப்படியேதான் வெட்டுபட்டு சடலமாகதான் இருந்திருக்கிறாள். அவள் உடலை துணியால் போர்த்த கூட யாருக்கும் துணியில்லை அதற்கும் துணிவில்லை. ஒருவேலை அப்போதும் கூட அவர்களின் ஆடையில் உள்மறைந்திருக்கும் குறி இறந்த பெண்ணின் அங்க கவர்ச்சியை பார்த்து, துடித்து முட்டிக்கொண்டு இருந்திருக்கும். இறந்த பெண்ணைகூட கவர்ச்சியாய் பார்க்கும் சமூகதான் இது. இதுபோல் பேடிகள் நிறைந்த சமூகத்தில்தான் நாம் அனைவரும் வாழ்கிறோம்.

2013 ஆண்டு என்று நினைகிறேன் என் பிள்ளைகளை பள்ளியில் விட்டுட்டு வந்துகொண்டிருந்தேன் அப்போது சாலையின் ஒரமாக கூட்டமாக பல பேர் வேடிகை பார்த்துகொண்டிருந்தார்கள் ஒரு இளம் வயது பெண் அடிபட்டு கிடைகிறாள் அவள் மூக்கிலும், காதிலும் ரத்தம் வந்துகொண்டிருந்தது மூச்சு இழுத்துகொண்டிருந்தது இதை பார்த்த பல பேர், "ஏம்பா 108 ஆம்புலன்சுக்கு சொல்லியாச்சா.. போலிசுக்கு சொல்லியாச்சா.." என்றே சொல்லிகொண்டிருந்தார்கள் ஆனால் யாரும் அப்பெண்ணை தூக்கி ஆஸ்பிட்டலும் கொண்டு செல்ல முன்வரவில்லை இதை பார்த்த நான் அவர்களை கேட்டே விட்டேன் "ஏங்க இப்படி பார்கிரிங்களே.. தூக்குங்க, ஆட்டோ பிடிங்க.." என்றேன். அப்பெண்ணின் தலையை பிடித்து நான் தூக்கினேன். ஆனால் எந்த ஆம்பிளையும் அப்பெண்ணை தூக்க முன்வரவில்லை ஆனால் அங்கு பிளாட்பாரத்தில் பூ கட்டி விற்கும் ஒரு நடுத்தர பெண்மணி அப்பெண்ணின் காலை பிடித்து தூக்கினாங்க.. பின் ஆட்டோ வந்தது. நானும் அந்த பூக்காரம்மாவும் ஆட்டோவில் அப்பெண்ணின் தலையை என் மடிமேல் படுக்கவைத்து, பக்கத்தில் இருக்கும் ஆஸ்பிட்டலுக்கு சென்றுகொண்டிந்தோம். ஆஸ்பிட்டலுக்கு போய்கொண்டிருக்கும்போதே அப்பெண்ணுக்கு நினைவு கொஞ்சம் கொஞ்சமாக போய்கொன்டிருக்கிறது என்று எனக்கு தெரிந்தது. அப்பெண்னை நினைவில் வைத்திருக்க நான், "அம்மா பாரும்மா.. உனக்கு ஒன்னும் இல்லம்மா.. நீ நல்லா இருக்கம்மா" என்று சொல்லிகொண்டே இருந்தேன் ஆனால் அப்பெண்ணின் தலை என் மடியிலே தொங்கிவிட்டது. அவள் இறந்துவிட்டாள் என்று எனக்கு தோன்றிவிட்டது. மூச்சில் கைவைத்தேன். சுவாசம் நின்றுவிட்டது. ஆஸ்பிட்டலும் வந்துவிட்டது. நாடி பார்த்து சொன்ன டாக்டர், "உயிர் போய்விட்டது.." என்றார். என் வாழ் நாளில் அந்நாளை மறக்கவே முடியாது. எனக்கு அன்றைய இரவு பொழுது தூங்கவே முடியவில்லை.  அந்த பெண்ணின் முகமும், அவள் என் மடிமேல் உயிர்விட்ட அந்த கடைசி காட்சியே என் நினைவில் நிழலாடி வேதனையை தந்தது.

இங்கு அடிபட்டு இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்லக் கூட யாரும் முன்வரமாட்டங்கிராங்க... போலீஸ் பயம், நமக்கு எதற்கு வம்பு என்ற சுயநல எண்ணம். நாம் என்னமாதிரி சமூகத்தில் வாழ்கிறோம்.? என்ன மாதிரி மன நிலையில் நாம் இருக்கிறோம்.!?

இது போன்ற வெறுப்புதான் எனக்கு வார்த்தைகளில் விலாசலை தருகிறது. இவைபோன்ற நிலைபாட்டில்தான் என்னால் எழுத முடியவில்லை. சில சகோதரிகள், நண்பர்கள் கேட்டுகொண்டதால் என்னால் முடிந்த பதிவுகளை இனி எழுதலாம் இருக்கிறேன். நன்றி..!

நட்புடன்:
Rk.Guru

0 comments: