Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, May 29, 2016

ஒரு நாள் கடல் வரும். அதில் ஒசையில்லாமல்...!



எங்க வீட்டு பக்கதுல எனக்கு தெரிந்த ஒருத்தர் இருக்கார் அவரிடம் நான் பேசும்போதெல்லாம் அவர் சொல்லுவார், "எனக்கு இந்த பந்தாவே பிடிக்காது. நான் ரொம்ப சிம்பிள், வீண் விளம்பரம் எனக்கு சுத்தமா பிடிக்காது. என் உடம்புல ஒரு தங்கம் போட்டிருக்கன்னா பாருங்க... எனக்கு இந்த தங்க நகை போடுவதே பிடிக்காது. எதுக்கு வெட்டி பந்தா.." என்று சொல்வார். ஆனால் அவரின் சொத்து சுகம், சொந்த தொழில் லாபம், பேங்க் பேலன்ஸ், சொந்தவீடு, அவரின் சொந்த ஊரில் அவருக்கு பல ஏக்கர் இடம், அவர் பேரில் ஒரு கல்யாண மண்டபம், இப்படி எனக்கு தெரிந்து அவருக்கு அவ்வளவு சொத்து உள்ளது. ஆனால் ஆளை பார்த்தால் எளிமையை அவர்தான் எளிமையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தார்போல இருப்பார். அப்படி ஒரு பஞ்ச பரதேசி தோற்றம்.

இப்படி அவர் என்னை பார்க்கும்போதெல்லாம் அவரைபற்றியே சொல்லிகொண்டிருப்பார். நான் சொன்னேன், "நான் கேட்டவரை, இதை நீங்க அதிக முறை என்னிடம் சொல்லிட்டிங்க... இதுக்கு மேலையும் என்னால உங்க பேச்சை பொறுத்துகொள்ள முடியாது. விளம்பரம் பிடிக்காது, தங்கம் பிடிக்காது, எந்த ஆடம்பரமும் பிடிக்காது என்று திரும்ப திரும்ப சொல்றிங்களே... இப்படி நீங்க சொல்லுவதே ஒரு விளம்பரம்ன்னு உங்களுக்கு தெரியலையா...!? நீங்களே உங்களை சுயவிளம்பரம் செய்து செய்துகொள்றிங்களே.. இது உங்களுக்கு சரியா.? தவறா.?. என்று தோணலையா..?" என்றேன். அவர் என்னை ஒருமுறை ஏறிட்டு பார்த்துவிட்டு, பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து போய்விட்டார். அப்புறம் அவர் என்னை பார்கும்போதெல்லாம் தன்னை பற்றி "எளிமை புகழ்" பாடுவதை நிறுத்திகொண்டார்.

"நான் ரொம்ப எளிமையானவன்" என்று சொல்வதும் ஒருவித விளம்பர நோக்கம்தான். வசதி வாய்ப்பு இருந்தால் அனுபவிக்க வேண்டியதுதான். எதுக்கு தன்னை வருத்திகொண்டு கபடநாடகம் ஆடனும். நாம் என்ன சாப்பிடனும் என்று பிறர் என்ன முடிவு செய்வது. இதன் அடிபடையில்தான் நம் வாழ்க்கை அமையனும். நம் கையில் நாம் உழைத்த உழைப்பின் பணம் இருந்தால் வாழ்க்கை தேவைக்கு போக மீதியை வசதிக்காக வாய்புக்காக செலவு செய்து, அனுபவிக்க வேண்டியதுதான். முடிந்தால் பிறருக்கு உதவி செய்யலாம் முடியவில்லையென்றால் அதற்காக வருத்தபடனும் என்ற எந்த அவசியமும் இல்லை. தன்னை தியாகியாக்கி மனதில் அதை உருவகபடுத்தி கருவாடாக காயவேண்டாம்.

நான் சமீபத்தில் படித்த செய்தி எனக்கு நினைக்கு வருகிறது. ஒரு சினிமா பத்திரிக்கையில் அச்செய்தி படித்தேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியது. ரஜினி எப்போதவது நடு இரவில் மாறுவேடம் போட்டு அவரே காரு எடுத்துகொண்டு எங்காவது கிளம்பிவிடுவாராம்,. எங்காவது பிச்சைகாரர்கள், ஏழை கூலி வேலை செய்து பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் மக்களுடன் இவரும் சென்று அங்கையே பிளாட்பாரத்தில் படுத்துவிடுவாராம். அவர்களிடம் ரஜினி, "நீங்க படம் எல்லாம் பார்பிங்களா.. இந்த சூப்பார் ஸ்டார் என்று சொல்றாங்களே ரஜினி அவரை பற்றி எண்ண நினைகிறிங்க..." என்றேல்லாம் கேட்பாராம். அவங்க சொலுவாங்களாம், "ரஜினி ஒரு அருமையான மனுசன், ஏழைக்கு உதவ கூடியவர்..." என்று.. இப்படியெல்லாம் அவர்கள் சொல்வதை கேட்டு அன்றைய இரவு பொழுதை அங்கையே அவர் கழித்துவிட்டு வருவாராம். அவருக்கு வசதி வாய்ப்பு, காசுபணம் மேல அப்படி வெறுப்பு வந்துவிட்டது. புகழ்ச்சி மேல அவருக்கு அப்படி ஒரு சலிப்பு வந்துவிட்டது." என்று இப்படியெல்லாம் நாம் நினைத்தால் அது நம் தவறு. அவருக்கு எளிமையாக இருக்கனும். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கனும். எழையின் கஷ்டங்களை உணரனும், நாமும் அதுபோல ஒரு நாள் இருக்கனும் என்று ஆசைபடுகிறார். அது அவருக்கு சரியாக இருந்திருக்கு ஆனால் அதே பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் பிச்சைகாரனுக்கும் ரஜினி போல வாழனும், வாழ்க்கை வசதியெல்லாம் அனுபவிக்கனும் என்ற ஆசை இருக்கும் இல்லையா..? இதுதானே நியாயம். அதற்கு ரஜினி என்ன செய்திருக்கனும். பிச்சைகாரர்களை அவர் வாழும் வசதியை அன்றைய பொழுது அவர்களுக்கு ஏற்படுத்திகொடுத்துவிட்டு இவர் அவர்கள் வாழ்க்கைக்கு ஆசைபடனும்.. அதுதானே சரியாக இருக்கும். அப்புறம் அந்த பிச்சைகாரர்களுக்கு தெரியாமல் அவர்களுடன் படுத்து உறங்களாம் அவர்களின் ஏழ்மை நிலையை தனதாக்கி அதில் ஒரு சுகம் காணலாம் அது தவறில்லை. ஆனால் ரஜினி அப்படி செய்கிறாரா..?இல்லையே..! பாதுகாப்பாக நிலம்,புலன், சொத்து சுகம், வசதி வாய்ப்பெல்லாம் ஏற்படுத்திகொண்டு, வாழ்க்கை அடிதளம் மிக உறுதியாக அமைத்துகொண்டு, நட்டநடு ராத்திரியில் ஏழ்மை வேஷம் போடுகிறார்.. அவர் போடும் பல வேஷத்தில் இப்படி ஒரு வேஷம் அவருக்கு தேவையாக இருக்கிறது. மேலே என்னிடம் பேசிய "எளிமை புகழ்" நபரும், ரஜினியும் பெரிய வித்தியாசம் இல்லை. இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான ஆட்கள்தான்.

பாபா, குசேலன் படம் அவருக்கு மிகவும் தோல்வி படமாக அமைந்தது. அடுத்து நடிக்கும் படம் வெற்றி படமாக அமையனும் என்ற அவரின் நோக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்து நன்கு ஒடிய வெற்றி படமான "சந்திரமுகி" (கன்னடத்தில் வேறு பெயர்) படத்தை இயக்குனர் பி.வாசு தமிழில் எடுக்கிறார். படம் மிக பெரிய வெற்றிபடமாக அமைந்துவிட்டது. அது ரஜினிக்கு மிக பெரிய வெற்றியாக அமைந்தது. மீண்டும் அவரின் வெற்றி உறுதி செய்யபட்டது. அதற்காக அவர் ஒரு நட்சத்திர விடுதியில் முக்கிய சினிமா பிரபலங்களுக்கு மிகபெரிய பார்ட்டி வைக்கிறார். அங்கு "நான் மீண்டும் ஜெயிச்சிட்டேன்" என்று ஆவேசமாக அங்கு இருப்பவர்களிடம் சொல்கிறார். .இச்செய்தியை நான் ஒரு சினிமா  நாளிதழில் படித்தேன். ரஜினி, பாபா, குசேலன் போன்ற தோல்வி படங்கள், அவரை வெற்றி படதிற்கு அழைத்து சென்றிருக்கிறது. "நான் வெற்றி அடைந்தேன்" என்று மகிழ்ச்சி அடைந்தார். தோல்விக்காக வெற்றியை விட்டு கொடுக்க அவருக்கு முடியவில்லை. தோல்வியை பக்கத்தில் வைத்துகொள்ள அவர் விரும்பவில்லை. ஆனால் அவரின் மனசு ஒருவித தோல்வி, தோய்வு, ஏழ்மை, துறவு நிலை போன்றவற்றை விரும்புகிறது. அவர் வாழ்வில் இதுதானே நடக்கிறது. இது யாரை ஏமாற்றும் வித்தை தெரியவில்லை. எனக்கு ரஜினிமேல் தனிபட்ட கோவம் இல்லை ரஜினி போல் இந்நாட்டில் என்னற்ற மக்கள் இப்படிதான் இருக்கிறார்கள்.

"வசதி வாய்ப்புடன் பாதுகாப்பாக இருப்பார்களாம் ஆனால் ஏழ்மையை கண்டு பரிதாபாடுவார்களாம் ஆனால் தன் பாதுகாப்பு, வெற்றியை விட்டுகொடுக்கமாட்டார்களாம்" இதுபோல இருப்பதெல்லாம் என்ன ஒரு வாழ்க்கை நிலை.? இது இரண்டுகெட்டான் வாழ்க்கைதான். அதுலையும் அனுபவைக்க தெரியாம, இதுலையும் இருக்க முடியாம.. இருக்கும் ஒருவித குழப்பமான மனோன்னிலை. இப்படி எல்லாம் வாழ்வது ஒரு வாழ்க்கையே இல்லை. என்னை கேட்டால் நான் சொல்வேன், "வெளியே ஒரு சக்ரவர்த்தி போல வாழுங்கள். எந்த வசதி வாய்ப்பு இருக்கிறதோ அதை எல்லாம் ஏற்படுத்திகொண்டு அனுபவத்து வாழுங்கள் ஆனால் உள்ளுக்குள் எந்த வசதி வாய்ப்பும் தன்னை தீண்டாத அளவுக்கு ஒரு புத்தனாக இருங்கள்" ஆனால் உலகத்தில் இன்று என்ன நடக்கிறது. இதற்கு நேர்மாறாகதான் நடக்கிறது. உள்ளே சொத்து சுகத்தை பாதுகாப்பான ஒரு நிலையான கட்டமைப்பை ஏற்படுத்திகொண்டு ஒரு அரசனாகவும், வெளியே எளிமையின் புகழ் பாடும் பஞ்ச பரதேசி கோலம் கொண்டு இருக்காங்க.. இப்படி இருப்பது அவர்கள் மனதின் மிக நுட்பமான அங்கார திமீர்தனம்தான்.

நீங்களும், நானும் பிறக்கும் போது தனியாகதான் வந்தோம், இறக்கும்போதும் தனியாகதான் போகபோகிறோம். "நான் இவ்வளவு நாள் எளிமையாக வாழ்ந்தேன். என்னை நீங்கள் எல்லாம் பாராட்டினீர்கள் உங்களை போல்தான் எல்லோரும் வாழுனும் என்றேல்லாம் நீங்க சொன்னீர்கள் இப்போது நான் இறக்கும் தருவாயில் இருக்கிறேன். என்னுடன் யாராவது வாருங்கள். என் எளிமையுடன் சேருங்கள். என் மரணமும் ஒரு எளிமைதான் இருக்கிறது. பாருங்கள் நான் வெறும் தரையில்தான் படுத்திருகிறேன். இப்போது என் உயிர் பிரியபோகிறது. வாருங்கள் நாம் எளிமையுடன் இறப்போம்.." என்று கூப்பிட்டு பாருங்க...!? அவங்க வாயில் இருந்து இதுதான் வரும், "இவன் என்ன சுத்த கிறுக்கனா இருக்கான்.. இவன் இவ்வளவு நாளா எளிமையா இருந்தான் சரி.. இப்ப சாக போறான். இப்ப நம்மையும் கூப்பிடுரானே.." என்பார்கள். மிஞ்ச்சிபோனால் உங்களுக்கு ஒரு சிலைவைப்பார்கள். வரலாற்றில் சில பக்கங்களை உங்களுக்காக ஒதுக்குவார்கள். இவ்வளவுதான் அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் எளிமையின் பரிசு, மரியாதை.

ஒன்று நல்லா புரிந்துகொள்ளுங்கள் யாரும் யாருக்காகவும் வருத்தபட மாட்டாங்க.. அப்படி வருத்தம் அவர்களூக்கு இருக்கிறது என்றால் அதில் அவர்களின் சுயநலன் சார்ந்துதான் இருக்கும். அதனால், "மற்றவர்கள் நம்மேல் நன்மதிப்பு ஏற்படுனும் அதனால் நாம் எளிமை தோற்றம் கொண்டு இருக்கனும்" என்று  நாம் முடிவெடுக்கவேண்டாம். இது நம் முட்டாள்தனத்தையே நிறுபிக்கும்.

இந்த எளிய உண்மையை நீங்கள் புரிந்துகொண்டால் நீங்க வாழும் வாழ்வு புனிதமாகும். அப்புனிதம் உங்களுக்கானதாக இருக்கும். முதன் முறையாக நீங்க, உங்களுக்காக உங்க வாழ்க்கை விரும்பி வாழ ஆரம்பிப்பீர்கள். அதுதான் உண்மையான வாழ்க்கை. வெளியே ஒரு அரசனை போல் இருப்பிங்க.. உள்ளே அமைதியின் உருவமான புத்தரின் நிழல் கொண்டு இருப்பிங்க... இதுவே அழகிய தெய்வீக வாழ்க்கை. ஜீவித ஒளிகொண்ட வாழ்க்கை. பழைய சாதம் கிடைத்தால் ஒரு புத்தனை போல் உண்ணுங்கள். தேவாமிர்ந்தம் கிடைத்தால் ஒரு அரசனை போல் உண்ணுங்கள். இங்கு அரசனில் ஒரு புத்தர் இருக்கிறார். புத்தரில் ஒரு அரசன் இருக்கிறான். 

 
இப்படிதான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் அமையனும். ஒரு ஜென் துறவிடம் கேட்டாங்க,, "வாழ்க்கை என்றால் என்ன.? என்று. அத்துறவி தான் தோளில் சுமந்திருக்கும் மூட்டையை கீழே இறக்கிவைத்தார். பின் அவர்கள், "வாழ்க்கையின் நோக்கம் என்ன.? என்றார்கள். அத்துறவி கீழே இறக்கிய மூட்டையை தோளில் சுமந்துகொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார். இதுதான் ஜென்னின் வாழ்வியலை பற்றிய மிக எளிமையான தத்துவ விளக்கம். வாழ்க்கையின் நோக்கம் மூட்டையை சுமந்துசெல்வது. தேவைபடும்போது அதை சுமக்காமல் இறக்கிவைப்பது.

இதனால் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். உங்கள் தேவை அறிந்து வாழுங்கள். எந்த தியாகி பட்டமும் நமக்கு தேவை இல்லை. வாழ்க்கையை எந்த கலங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக மாற்றுங்கள். பின் அந்நீரோடையில் பல பேர்  நீர் அருந்த வருவார்கள். ஆனந்த குளியல் போடுவார்கள். மீன்கள் அந்நீரில் துள்ளி குதித்து நீந்தும், பல விலங்குகள், பறவைகள் தாகம் தீர்த்துகொள்ளும்.. உங்கள் பெருமையை எல்லோரும் புகழ்ந்துவிட்டு செல்வார்கள். ஆனால் எந்த புகழ்ச்சியும், இகழ்ச்சியும் எதுவும் உங்கள் மையத்தை தீண்டாது. நீங்கள் மையத்திலே இருப்பீர்கள். தெளிந்த நீரோடியாகவே இருப்பீர்கள். ஒரு நாள் கடல் வரும். அதில் ஒசையில்லாமல் கலப்பீர்கள். பிறவி பெருங்கடலை கடந்து செல்வீர்கள்.

நாம் வாழும் வாழ்வு நமக்காக இருக்கும் போது அது பிறருக்காவும் மாறும். எல்லாம் தன்னால் மாறும். இதுதான் இயற்க்கையின் மிக நுட்பமான சூழ்ச்சம ஆன்மிக விதி. நன்றி...! 

  
நட்புடன்: