Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, January 17, 2024

டிஜிட்டல் யுகம்

சங்ககாலத்தில் மக்களின் வாழ்வியலில் மன்னரின் படையாட்சி, புலவர் போன்ற அறிவுசார் சான்றோர்கள், மக்களுக்கும், மன்னருக்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்து கொண்டிருந்தார்கள். அதன்பின் காலம் சென்றதும் குடியாட்சி மலர்ந்தது, பின் ஆட்சியில் மக்களை பங்கேற்கும் நிலைக்கொண்டு அரசியல்வாதிகள் என்று தனிப்பெரும் பிரிவாக அது பிரிந்தது. புலவராக இருந்த சான்றோர்கள் அறிவுசார் கலை, இலக்கிய எழுத்தாளார்களாகவும், மேடை பேச்சாளர்களாகவும், கவிஞராகவும், நடிகராகவும், மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு மையமாக இருந்தார்கள். பின் தமிழக அரசியலில் சாதிய, மதத்துவ இழிவை புறம்பட பேசி சமுகநீதி போன்ற உள்ளீட்டு காரணிகளை கொண்டு, கொள்கை, சித்தாந்தம் தத்துவார்த்த அடிப்படையில் பெரியார், தோழர் ஜீவானந்தம் போன்றோர்கள் மற்றும் அண்ணா, கலைஞர் போன்றோர் தங்களின் பேச்சு, எழுத்து கலை இலக்கிய தன்மையைக் கொண்டு மக்களிடம் ஜனநாயகஅரசாட்சியின் மேன்மைதன்மையை, மக்கள் நலன் சார்ந்து, கொண்டு சென்றார்கள். (இதில் கலைஞர் தன் மக்கள் நலன் சார்ந்தும் கொண்டு சென்றார்.) ஆனால் தற்போது மன்னராட்சி அதிகாரதனமும் இல்லை, பெரியார், ஜீவானந்தம் போன்றோர் முன்னெடுத்த சமூகநீதி கோட்பாடு, தத்துவார்த்த அரசியலும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூக வட்டத்திற்குள் அறிவுசார் மக்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் ஆற்றலான பேச்சு, எழுத்து, நடிப்பு போன்ற கலை இலக்கியதாலும் நிலைக்கொண்டு தனித்துவப்பட்டது. அந்த தனித்துவமே எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற பிம்பங்களை மக்கள் முன் முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு தள்ளியது. அதாவது கலை, இலக்கியம் மக்களிடம் மேலோங்கி அது அரசியல்தனத்திற்கு வழிவகுத்தது. அதைக்கொண்டு எழுத்தாளர்களும், பட்டிமன்ற பேச்சாளர்களும், கவிஞர்களும், நடிகர்களும் தன்முனைப்போடு 2015 ஆண்டு வரை திரிந்துகொண்டிருந்தார்கள். ஆனால் 2015 மேல் டிஜிட்டல் யுகத்தில் வரைமுறையற்ற இணைய சேவை கிடைத்தபின் அந்த அறிவு சார் மக்களின் பெருமதிப்பு மற்றும் கர்வமிதப்பு பெருமளவு புறம் தள்ளப்பட்டது . வாட்ஸபில், கவிஞர்கள், குறும் எழுத்தாளர்களை நிறையப்பேர் உருவாகினார்கள். டிக்டாக், ஷார்ட் மூலமாக தன் நடிப்பை வெளிப்படுத்தினார்கள் அதன்மூலம் வாய்ப்பும் பெற்றார்கள். இப்படி இருக்கையில் கலை, இலக்கிய, நடிப்பு கலைஞர்களின் அதிகார மமதையை மக்களிடம் ஏற்படுத்த முடியவில்லை. அது ஒடுங்கிவிட்டது (அ) ஒடுக்கபட்டது. இனிமேல் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற எந்த கலைஞர்களும் அரசியல் தலைமைத்துவத்தை கைப்பற்ற முடியாது. அதற்கு மறைந்த விஜயகாந்தே சாட்சி. அதேபோல் அறிவுசார் எழுத்துலக தலைமையும், தானே சிறந்த பேச்சாளர்கள் என்று பெருமிதம் கொள்ளும் பிம்பமும், மக்களிடம் காட்டாற்று வெள்ளம் போல், டிஜிட்டல் யுகம் அடித்து துவம்சம் செய்துவிட்டது. இது தமிழ்நாட்டு அரசியலின் ட்ரண்டை, ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களிடம் இருக்கும் இன, மொழி, மத, சாதியவாதம் அனைத்தும் இந்த டிஜிட்டல் யுகத்தில் அடித்து நொருக்கபடுகின்றது. மக்களுக்கான வாழ்வியலுக்கான அரசியலை யார் கொண்டு செல்கிறார்களோ, அதைப் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களே பரிமாணதிற்கு (சர்வைவலுக்கு) பொருந்தமுடியும். அவர்களே இந்த டிஜிட்டல் யுகத்தின் முதன்மை ஹீரோக்களாக கொண்டாடபடுவார்கள். அப்போதெல்லாம் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு முக்கோண வடிவதன்மை இருந்தது. மக்கள் ஒருமுனையில் இருந்தால், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருமுனையானாலும் ஓர் முனையாக செயல்பட்டார்கள்(செயல்படுகிறார்கள்) மக்களிடமிருந்து மறைமுகமாக விலகித்தான் இருந்தார்கள். மக்கள் அவர்களை ஒரு பிரமிப்பாக,பயத்துடன்தான் பார்த்தார்கள், அதைதான் அவர்களும் விரும்பினார்கள் ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் அந்த இரண்டு புள்ளியும் மக்களின் கீழ் செயல்படும் தன்மைக்கு முழுதாக கொண்டுவர முயற்சிக்கிறது, அவர்களுக்கு, "மக்களுக்காகத்தான் நீங்கள்.." என்று உணர்த்துகிறது. #மக்களே முதன்மையானவர்கள். இன, மொழி, சாதி சமயமற்ற நல்வாழ்வுக்கான அடையாளத்தை நோக்கி தற்போது தமிழ்நாட்டு அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை நினைத்து எனக்கு பெரும் மகிழ்ச்சி..!! :-Rk.Guru rkguru3@gmail.com (Share this post...)