Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, March 16, 2019

மலர்ந்த நினைவுகள்


பல வருடம் முன்பு நிகழ்ந்ததை நினைக்கும்போது இன்னும் என்னுள் பல கிளர்ச்சிகளை உண்டாக்குகிறது. ஒரு ஆணானவன் அவன் தன் உணர்வுகளை வெளிபடுத்த வார்த்தைகள் உண்டு ஆனால் பெண்ணான எனக்கு என்ன வார்த்தையால் அதை நான் சொல்வேன். அழகிய சூழலில்தான் நான் வளர்ந்தேன். படித்தேன். அனைத்து பிள்ளைகள் போல்தான் நானும் ஓடியாடி விளையாடினேன் அப்போது என் அத்தை மகன் என்னுடன் விளையாடுவார் நாங்கள் விளையாட்டு பிள்ளையாகதான் வளர்ந்தோம் எனக்கு முதன் முதலில் சைக்கிள் ஓட்ட கற்றுகொடுத்ததே என் மாமாதான். "மாமா என்னை விழாமல் பிடிச்சிகோங்க.." என்று நான் சொல்லும்போதெல்லாம் என்னை விழாமல் என் மாமாதான் தாங்கி பிடிப்பார். அப்போது சிறுமியாக இருந்த எனக்கு என் மாமா, என் நண்பனாகதான் தெரிந்தார். பின் என் மாமா, அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சில நாட்கள் ஓடின, அப்போதெல்லாம் எனக்கு சைக்கிள் ஓட்டும்போது என் மாமாவே என் நினைவுக்கு வந்தார். அன்று ஒரு நாள் சைக்கிள் ஓட்டும்போது என்னை தாங்கி பிடிக்க அங்கு யாருமில்லை.. நான், "மாமா..” என்று கத்திகொண்டே விழுந்தேன். எனக்கு அடிபட்டது. வலித்தது, அந்த வலி எனக்கு பெரிதாக இல்லை ஆனால் அங்கு என் மாமா இல்லாத வலியே என்னை பெரிதாக வாட்டியது. முதன் முதலில் நண்பன் என்ற முகவரியை தாண்டி என் நேசத்துகுரியவராக மாறினார் என் மாமா... தமிழில் எனக்கு பிடித்த எழுத்துகள் இரண்டு ஆமாம் அது என் ‘மா’மா’ மட்டுமே. என் பள்ளி படிப்பு சென்றுகொண்டிருந்தது ஒரு நாள் நான் பெரியவளாக ஆகிவிட்டேன் என்று இந்த சமூகம் சொன்னது. அதுவரை சிறுமியாக இருந்த நான் எப்படி பெரியவளானேன்.!? என்று எனக்கு நானே கண்ணாடி முன் நின்று கேட்டுகொண்டேன் அப்படி கேட்கும் வேலையில் என் கண்களுக்குள் கண்மணியாய் என் மாமாவின் முகமே தெரிந்தது. அதில் என் முகம் பூரிப்பு அடைந்தது "நீ பெரியவளாகிவிட்டாய்.." என்று இந்த சமூகம் சொன்னது இதுதானோ.! என்று நினைத்தேன். எனக்குள் ஏற்பட்ட மாற்றமும் மற்றும் என் மாமாவின் நினைவுகளும் இப்படி என்னை பல இரவுகள் தூங்கவிடாமல் தென்றலாய் தாலாட்டியது.

அன்று ஒரு நாள் என் மாமாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பருவம் எய்தியது போல் அவரும் பருவம் எய்திவிட்டார் போல.. நான் பார்க்கும் வேலை, ஒரு சின்ன புன்னகையுடன் வெட்கத்தில் அவர் தலைகுனிந்தார் எனக்குள் ஒரு சந்தேகம் பொதுவாக பெண்கள்தானே வெட்கபடுவார்கள் இவர் என்ன இப்படி வெட்கபடுகிறார் என்று யோசிக்கும் வேலையில் குனிந்த தலை மெல்ல என்னை நோக்கி பார்த்தது. இப்போது அந்த வெட்கம் என் மேல் தொற்றிக்கொண்டது நான் தலை குனிந்தேன். இப்போது அந்த வெட்கத்தின் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்தது. அப்போது ரேடியோவில் எம்எஸ்வி இசையில் பாடல் ஒன்று ஒலித்தது, "காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விளங்குகள் ஏது...' என்ற பாடலில் நான் மெய்மறந்து கண்களை மூடி ரசித்து, பின் கண் திறந்து பார்க்கும் வேலை, என் மாமா, என் கண் எதிரே இல்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன் "அவங்க அப்பவே கிளம்பிட்டாங்கடி.." என்று என் பாட்டி சொன்னாங்க. அதுவரை நானாக இருந்த நான் என் மாமாவை பார்த்த பின் நானாவே இல்லை. என் மாமாவின் நினைவாகவே நான் மாறிவிட்டேன். எப்போது புது பேனா வாங்கினாலும் என் பெயரையும் மறந்து, முதலில் என் மாமா பெயரையே எழுதினேன். காதல் கோட்டை படத்தில் வருவது போல் எங்கள் காதலும் இதயத்தில் ஆரம்பித்து கண்களில் முடியவில்லை ஏனென்றால் எங்களுக்குள் இதயங்கள் பேசிகொள்ளவே இல்லை அதற்கான வாய்ப்பு அப்போது சரியாக அமையவில்லை இப்போது இருக்கும் மொபைல் போன் வசதி, மற்றும் வாட்ஸ் அப் போன்றவை அப்போது இல்லை எங்களால் தனியாகக்கூட சந்தித்து பேச முடியவில்லை. என் காதலை அவரும் புரிந்துகொண்டார், நானும் புரிந்துகொண்டேன் ஆனால் நாங்கள் பரஸ்பரமாக பேசி பழகவில்லை.

நாட்கள் சென்றன, பிறருடைய மரணங்கள் எங்களை பார்க்க வைத்தது. எங்க தாத்தா இறந்தவிட்டார் என் தாத்தா இறந்த சோகத்தை தாண்டி என் மாமாவை பார்க்கும் ஆவல் எனக்குள் உண்டானது. பிணத்தை வைத்துகொண்டு எல்லோரும் அழுதுகொண்டிருக்கும் வேலையில் நாங்கள் கண்களால் பேசிகொண்டோம் தாத்தாவின் ஆவி ஒரக்கண்ணால் பார்த்து சிரித்தது. அன்றும் என் மாமா என்னிடம் பேசாமலே சென்றுவிட்டார் காலண்டரில் நாட்கள் கிழிக்கபடுவதற்கு பதில் மாதங்கள் கிழிக்கபட்டு ஓடின.. எனக்குள் என் மாமா மேல் உள்ள காதல் ஆசையை, அதிகம் வளர்த்துவிட்டது என் சின்ன அத்தைகள்தான் அவங்க வரும் போதும், போகும்போதெல்லாம் என் மாமா பற்றி சொல்லி சொல்லியே என் மாமா மேல் ஒரு அனுதாபத்தை உண்டாக்கி வைத்துவிட்டார்கள் தாய் இல்லாத என் மாமாவை நான் கட்டிகிட்டு தாய் போல பார்த்துகோணும் என்று நினைப்பேன். எங்கள் காதலுக்கு எதிர்ப்பே எங்கள் பெற்றொர்களின் ஆணவம்தான் அவங்க சுயநலம் மட்டுமே.. இதில் எங்கள் விருப்பத்தை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நான் வீட்டில் இருந்தே தொலைதூர கல்வியில் பட்ட படிப்பு படித்தேன். அதற்கு வருடத்தில் சில சேமினார் வகுப்புகள் நடக்கும் அது போதிய மட்டும் சென்னையில்தான் நடக்கும் நான் எங்கள் வீட்டில் இருந்து சென்னைக்கு வந்து போக நேரம் போதாததால் என் சின்ன அத்தை வீட்டில் தங்கி வகுப்புக்கு போகும் சூழல் இருந்தது அன்று எனக்குள் ஏற்பட்ட இன்பம் வார்த்தைகளில் சொல்ல முடியாதது ஏனென்றால் எனக்கு படிப்பைவிட என் மாமாவை பார்ப்போம் என்ற நினைப்பே என்னை முழுதாய் தாங்கி நின்றது. ஒரு முறை என் மாமா நான் வழக்கமாக செல்லும் பேருந்தில் ஏறிவிட்டார் எனக்கு என் மாமாவை பார்த்ததும் திடீர் என்று இன்ப அதிர்ச்சி "இவர் எங்க இருந்தார், எப்படி இங்க வந்தார்.!?" என்று நினைக்கும் வேலையில் என் மாமா, "பஸ்சில் இருந்து இறங்கிடு காலேஜ் போக வேணாம் ஒரு இடம் போகலாம்" என்றார். இவர் என்னை எங்கு கூட்டிட்டு போக போறார் என்று என் மனம் தவித்தது, நாங்க ஒரு பூங்காவுக்கு சென்றோம் அங்கு தனிமையான இடம் மனம் விட்டு பேசுவதற்கு நல்ல வாய்ப்பு ஆனால் என் மாமா என்னை புகழ்ந்தே பேசிகொண்டிருந்தார் ஆனால் எனக்கு என் மாமாவுடன் எப்படி வாழ்வை அமைத்துகொள்ளவேண்டும் என்ற நினைப்பே இருந்தது இருந்தும் என் மாமாவின் பேச்சில் மெய்மறந்து கேட்டுகொண்டிருந்தேன். இருக்காதா பின்ன..! என் மாமாவுக்கதானே இவ்வளவு நாள் காத்துகொண்டிருந்தேன். ஆனால் என் மாமா எனக்கு முழுதாக கிடைக்கவில்லையே என ஏக்கம் மட்டும் இருந்தது ஆனால் கிடைப்பார் என்ற நம்பிக்கையும் இருந்தது. அன்று பேசிகொண்டிருக்கும்போது என் மாமா என் கைகளை பிடித்து அவர் கைகளுக்குள் வைத்துகொண்டார் என் கைகளை மெல்ல தடவிக்கொண்டிருந்தவர் பின் மெல்ல எடுத்து முத்தம் கொடுத்துவிட்டார். எனக்கு முத்தம் என்பது என் அம்மா, அப்பா கொடுத்த முத்தம் தாண்டி ஒரு ஆண் கொடுத்த முத்தம் அன்புடன் கலந்த ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. நான் சட்டென கைகளை இழுத்துவிட்டேன் அவரும் மெல்ல சிரித்துவிட்டார். மீண்டும் நாங்கள் தொடர்ந்து பேசினோம், பேசினோம், பேசினோம்...  நேரம் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறது என்று நேரத்தின் மேல் எங்களுக்கு தீராத கோவம் இருந்தது. ஒரு பக்கம் நான் மணியை பார்த்துகொண்டே இருந்தேன் ஏனென்றால் அத்தை பாதுகாப்பில்தான் நான் இருக்கிறேன் நான் இங்கு வந்திருக்கிறேன் என்று மட்டும் என் அம்மாவுக்கு தெரிந்தால் நான் தொலைந்தேன் மீண்டும்  இங்கு வரமுடியாமலும், என் மாமாவை பார்க்க முடியாமலும் போய்விடுமோ என்ற பயம் வேற இருந்தது. ஆம், சொல்ல மறந்துட்டேன் என் மாமா என்னிடம் பேசிகொண்டிருக்கும்போதே "அங்கு யாரோ உன்னை பார்க்கிறாங்க..." என்று சொன்னார். நான் திரும்பும் வேலையில் என் கண்ணத்தில் பட்டென முத்தம் கொடுத்துவிட்டார் இரண்டாவது முத்தம்  நான் என்ன செய்வது அப்படியே வெட்கத்தில் தலைகுனிந்து என் கால்முட்டிகளுகிடையே முகத்தை வைத்துகொண்டு கொஞ்ச நேரம் இருந்துவிட்டேன். பருவம் எய்திய பெண்ணுக்கு ஒரு ஆடவன் கொடுக்கும் முத்தம் மனதுக்குள் எவ்வளவு கொந்தளிப்பான தவிப்பை உண்டாக்கும் என்று ஒவ்வொரு பெண்ணும்  நன்கு அறிவாள் நானும் அதை உணர்ந்தேன். ஆனால் என் மாமா மேல், எனக்கு கோவம் இல்லை ஆனால் என் மாமாவின் முகத்தை பார்க்க எனக்கு கூச்சமாக இருந்தது. அப்புறம் வார்த்தைகள் அங்கு பேசவில்லை வெறும் மௌவுனமே எங்களுக்குள் பேசிகொண்டது. ஒருபக்கம் நேரமும் நகர்ந்து சென்றது. இப்படியே சில மாதங்களும் சென்றது என் மாமாவின் அண்ணன் அவரும் எனக்கு மாமாதான் அவரின் கல்யாணத்தில் நாங்கள் கலந்துகொண்டோம். அன்று மீண்டும் என் மாமாவை காணும் வாய்ப்பு கிடைத்தது. பல நாட்கள் சூரியனை பார்க்காத தாமரை, சூரியனை கண்டதும் எப்படி மலருமோ அதுபோல் நான் மலர்ந்தேன். என் மாமாவை நான் பார்த்தேன். நான் அவரை கண்டு அழுதேன். அவரும் கண் கலங்கினார் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை என் அம்மாவிடம், "உங்க மக என் மேல் ஆசையா இருக்கா அவ விருப்பபட்டா நான் அழைச்சிட்டு வந்துடுவேன்" என்றிருக்கார். எங்க அம்மா, வீட்டில் வந்து என் அப்பாவிடம் சொல்ல, அது பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. என் அப்பா, "அவன் வரட்டும் ஒன்னு போடுரேன்" என்றார். பின் என் அம்மா, “இவள் நம்மை விட்டு அவனுடன் போய்விட போறாள்” என்று எண்ணி என்னிடம், "நீ அவனுடன் போனால் என் பொணத்தை தாண்டிதான் போணோம்" என்று சினிமா பட வசனம் எல்லாம் பேசினாங்க என்னை ஒருவித மன மிரட்டலுக்கு உட்படுத்தினாங்க நான் என்ன செய்ய முடியும். அறியாத வயது, புரியாத மனது ஆனால் என் மாமா கிடைக்கனும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இருந்தது. என் அம்மாவுக்கு அவங்க தம்பியை எனக்கு மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்றவும் எனக்கு அவங்க தம்பி மேல் காதலை வளர்த்துவிடவும் மற்றும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து பேசி பழகிக்கவும் என்று நினைத்து அவங்க வீட்டில் சேமினார் வகுப்புக்கு படிக்க அனுப்பினார்கள். அதுவில்லாமல் என் அத்தைவீட்டில் இருந்துதான் முதலாண்டு சேமினார் வகுப்புக்கு சென்றேன் ஆனால் அடுத்த ஆண்டுக்குள் எங்கள் அத்தை வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் சண்டை அதனால் என் அம்மா அவங்க தம்பி வீட்டில் இரண்டாம் ஆண்டு சேமினார் வகுப்புக்கு அனுப்பினார்கள் நானும் அவங்க வீட்டில் தங்கி படித்து வந்தேன் என்னை அம்மாவின் தம்பிதான் வகுப்புக்கு அழைத்துகொண்டு போவார். பஸ்ஸில்தான் போவோம். போகும்போது ஏதோ அவர் சொல்ல முற்படுவார் நான் அவரின் தவிப்பை புரிந்துகொள்வேன்.  அன்று ஒரு நாள் மதியம் 12 அல்லது 1 மணி இருக்கும் என்று நினைக்கிறேன் அவர் என்னிடம் வந்து, “நான் உன்னிடம் கொஞ்சம் பேசனும் தனியாக வா..” என்றார். “அடடா..  சாரு ஏதோ சொல்லவராப்போல..” என்று நினைத்து போக தயங்கினேன். பின் அவர், “நான் தாய்மாமன் தானம்மா வாம்மா..” என்றார். “இல்ல மாமா எனக்கு பயமா இருக்கு” என்று சொல்லிவிட்டேன். பின் அவர் சென்றுவிட்டார். அன்று மாலை நான் வகுப்பு முடிந்து வீடு திரும்ப காத்திருந்தேன் அவரும் எனக்கு மாமா முறைதான் அவர்தான் என்னை அழைத்துகொண்டு போகனும் ஆனால் அவர் வரவில்லை நான் காத்திருந்தேன் எனக்கோ அந்த  இடம் புதிது எனக்கு ஒன்றும் புரியவில்லை அங்கையே சுற்றுமுற்றும் பார்த்து நின்றுகொண்டிருந்தேன். அவர் எங்கையோ ஒளிந்திருந்து பத்து நிமிடம் கழித்து பின்னால் வந்து நின்றார். “..ம்ம் இப்ப நீ எப்படி வீட்டுக்கு போயிருப்ப நான் வரலன்னா..? மதியானம் கூப்பிட்ட வரலன்னு சொன்ன.. என் அக்கா பொண்ணு அப்படியே விட்டுட்டுபோக மனசு வரல, சரி வா.. அப்ப என்கிட்ட பேச உனக்கு விருப்பம் இல்ல.!?..” என்றார். இப்படி அவர் சொல்லும் போது என் காதல் மாமாவைதான் நான் நினைத்தேன். அவர் மட்டும் இங்கு இருந்திருந்தால் என்னை ஒரு நிமிடமும் காக்கவும், கலங்கவும் வைக்காமல் இருந்திருப்பாரே என்று நினைத்தேன். அம்மாவின் தம்பி வீட்டில் நான் சாப்பிடும் போது “இதுதாம்மா உன் மாமா தட்டு, இதுதாம்மா உன் மாமா குடிக்கும் டம்ளர், இதுதாம்மா உன் மாமா எடுத்துபோகும் டிஃபின் பாக்ஸ்” என்றெல்லாம் சொல்வார்கள். இப்படி அவர்கள் பேசுவது எதனால் என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் சேமினார் வகுப்பு செல்வதற்கு முன்னால் அவரின் தங்கையின் நிச்சயதார்த்தம் நடந்தது அன்றுதான் நான் முதன் முறையாக சேலை கட்டினேன். ஆனால் அதை பார்க்க என் காதல் மாமா அங்கு இல்லையே என்று ஏங்கினேன். அந்த நிகழ்ச்சி முடிந்து ஆட்டோவில் நாங்க கிளம்பும் வேலையில் என் அம்மாவின் தம்பி என் அப்பாவிடம் என்னை கல்யாணம் செய்வதை பற்றி பேசினார், “அடடா.! என்ன இப்படி...”  என்று நினைத்துகொண்டேன் அந்த நிகழ்ச்சிக்கு பின்தான் அவங்க வீட்டில் சேமினார் வகுப்பு சென்றேன். அதன் பிறகே அவர் என் மேல் உள்ள விருப்பத்தை சொல்ல,  நான் அதை தவிர்க்க, பின் அவரே புரிந்துகொண்டு விலகிவிட்டார் பின் அவரின் தங்கையின் கல்யாணத்தில் அவரிடம் சென்று, “என்ன மாமா எப்படி இருக்கிங்க..?” என்று கேட்க, அவர் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை நானும் புரிந்துகொண்டேன். எப்படியோ இந்த மாமாவின் கதையை முடித்துவிட்டேன். அடுத்து எந்த மாமா எந்த சந்து, பொந்தில் இருந்து வருவானோ.. எந்த சந்தில் இருந்து வந்தாலும் அது என் காதல் மாமாவே வரனும் என்று நினைத்தேன். என் பட்ட படிப்புகான தேர்வுகள் என் மாமா படித்த கல்லூரியில்தான் நடந்தது. அங்கு நான் ஒவ்வொருமுறை தேர்வு எழுதி வெளி வரும் போது அங்கு சுற்றி சுற்றி வருவேன் அங்கு என் மாமாவை நான் பார்க்க மாட்டேனா, அவர் என்னை பார்க்க வரமாட்டாரா என்ற ஏக்கம் எனக்கு அதிகம் இருந்தது. அந்த ஏக்கத்தின்  நினைவுகள் நிராசையானது. என் மாமாவை பார்கவே முடியவில்லை.

இப்படி இருக்கும் வேலையில் என் குடும்பம் சில பிரச்சனைகளால் மீளாத துயரத்தில் சிக்கியது. அது குடும்ப பிரச்சனையாகவும் மற்றும் கடன் பிரச்சனையாகவும் மாறியது. அந்த வேலையில் என் தலையில் இடி விழுந்ததுபோல் ஒரு செய்தி, யாரை நான் என் உயிரினும் மேலாக நினைத்தேனோ அந்த உயிரிடம் இருந்து சில வார்த்தைகள் கடிதத்தில் அதில், “நீ மாறிவிட்டாய் என்று நினைத்தேன் அதனால் நானும் மாறிவிட்டேன்” என்றிருந்தது. “ஐய்யோ, மாமா ஏன் இப்படி எழுதினார்.?” என்று தவித்தேன். பல நாள் இரவு தூங்காமல் சோகத்தில் இருந்தேன். என் மாமா என்னை நேரில் பார்க்க வரமாட்டாரா.. இதை பற்றி நான் அவரிடம், “ஏன் மாமா இப்படி எழுதினிங்க..?” என்று கேட்கமாட்டோமா என்று ஏங்கி தவித்தேன். இதனாலே ஒவ்வொரு வாரமும் விளக்கேற்றி பிரார்திக்க கோவிலுக்கு சென்றேன் அப்போதாவது என் மாமா இங்கு வருவாரா என்னை பார்க்கமாட்டாரா என்று நினைத்தேன் ஆனால் என் மாமா வராமலே போய்விட்டார்.    

காலம் உருண்டோடியது என் மாமா என்னை பார்காமலே, எனக்கு கிடைக்காமலே போய்விட்டார் காலத்தின் அலங்கோலம் எனக்கு வேறொருவருடன் கல்யாணம் ஆகிவிட்டது. என்னைவிட வயதில் பத்து வயது மூத்தவர் அவரின் முகத்தையே நான்  நிச்சயதார்த்த ஆல்பத்தில்தான் பார்த்தேன் என்றால் என் மாமாவை நான் எப்படியெல்லாம் நினைத்திருப்பேன். எனக்கு ஏற்பட்ட காதல் வலி போல் உலத்தில் யாருக்கும் ஏற்படக் கூடாது. உலகத்திலே என் சொந்த மாமாவை காதலித்து கல்யாணம் செய்ய முடியாமல் போன துரதிஷ்ரசாலி  நானாகதான் இருப்பேன்.

அன்று ஒரு நாள் மதிய வேலை வீட்டில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது நான் யாராக இருக்கும் என்று பார்க்கும் வேலையில் என் மாமா அங்கு நின்றுகொண்டிருந்தார். சட்டென என் முன் பழைய நினைவுகள் வந்து சென்றது ஓடி சென்று என் மாமாவை கட்டி அழனும் போல இருந்தது ஆனால் என் கால்கள்  நடுக்கத்துடன் நின்றது. என் கழுத்தில் உள்ள தாலி தடுத்தது. “கணவனே கண் கண்ட தெய்வம்” என்று காலம்காலமாக பெண்களுக்கு மட்டும் சொல்லிவைத்த கிழடுகளின் வாதம் என்னை கட்டிபோட்டது. என் மாமா என்னை பார்த்து “எப்படி இருக்க..” என்றார். “..ம்ம் நல்லா இருக்கேன்” என்றேன். அவரின் கல்யாணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தார். என் கைகளால் அவருக்கு சாப்பாடிட்டேன் அதில் என் கண்ணீரும் கலந்திருந்தது. அதை அவர் உணர்ந்தாரோ என்னவோ, “உப்பாக இருக்கு” என்றார். அவர் தன் வருங்கால மனைவியை பற்றி பேசினார் நான் மௌவுனமாக கேட்டுகொண்டிருந்தேன். பின் அவர், வரேன்..” என்று சொல்லிவிட்டு சென்றார். எப்படி இருந்த எங்கள் பட்டு போன்ற காதல் இப்படி அங்குகொன்றும், இங்கொன்றுமாக கிழிந்து பொத்தாலாகி போனதே..! என்று நினைத்து வேதனைபட்டேன். அதன் பிறகு என் மாமா கல்யாணதிற்கு நான் செல்லவில்லை என் கணவரை மட்டும் அனுப்பினேன். அதற்கு காரணம் அவர் இதற்கு முன்னர் கடிதத்தில் எழுதிய வார்த்தைகள் அதன் மேல் உள்ள கோவம். அது ஆறாத வலியை கொடுத்தது. அதை பல நாள் எனக்குள்ளே புதைத்துவந்தேன்.

பெண்ணாக பிறந்து ஒருவனை மனதார காதலித்து அவனையே கரம்பிடிப்போம் என்று நம்பி இருக்கும்வேலையில் அவன் நம்மை விட்டு விலகும் சூழல் இருக்கிறதே ஐய்யோ.! அது மரணத்தின் வலியைவிட மிகக் கொடுமையானது. அந்த வலியின் கொடுமையை நான் ஒவ்வொரு நாளும் அனுபவித்தேன். இதை பற்றி எப்போதாவது என் மாமாவிடம் கேட்க மாட்டோமா என்று காத்திருந்தேன். சில வருடங்கள் ஓடின, என் பிள்ளைகளுகளும் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். என் அம்மா வீட்டு குடும்ப பிரச்சனைகள் ஒரளவுக்கு சீரானது. அதன் பின் என் மாமாவை பற்றி சில தகவல்கள் மட்டும் கேள்விபடுவேன் அவ்வளவுதான்.. என் குடும்பம், என் குழந்தைகள் என்று என் வாழ்க்கை பயணம் சென்றுகொண்டிருந்தது. பின் ஒரு நாள் என் அத்தை புதுவீடு குடித்தனம் போகும் நிகழ்வில் நான் என் மாமாவை பார்த்தேன் அவர் மொட்டை அடித்திருந்தார் என் பழைய மாமாவாக அவர் இல்லை அவரின் தோற்றம் மாறிவிட்டார்.  நான் அவரின் இலைக்கு பரிமாறினேன் என்னை ஏறிட்டு பார்த்தார் நான் ஆச்சரியத்தில் புன்னகைத்தேன் ஆனால் அவர் ஒரு புன்முறுவலுடன்  நிறுத்திகொண்டார் இன்னும் என்மேல் அவருக்கு கோவமோ என்று நினைத்துகொண்டேன். அதற்கு அடுத்து என் மாமாவை என் தம்பி கல்யாணத்தில் பார்த்தேன் அப்போது என்னிடம் சில வார்த்தைகள் பேசினார். அவ்வளவுதான் நாங்கள் பேசிகொண்டது. பின் என் தம்பியை பார்க்க என் வீட்டுக்கு வந்தார். என்னையும் பார்த்தார். பொதுவாகவே நாங்கள் நலம் விசாரித்துகொண்டோம். என் மகள் பருவம் எய்தினாள் அதற்கு என் மாமாவுக்கு பத்திரிக்கை வைத்தேன் அவரும் வந்தார். அப்போதும் பொதுவாகதான் பேசிகொண்டோம். நாட்கள் நகர்ந்தது. அவர் எப்போதாவது பண்டிகை நேரங்களில் வாழ்த்து சொல்ல அலைபேசியில் பேசுவார். நானும் வாழ்த்து சொல்லி பொதுவாகதான் பேசிவந்தோம்.

ஒரு நாள் என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு, எதிர்முனையில் என் மாமா என் மாமாவின் குரலை என்னால் எப்படி மறக்க முடியும். அவர் பொதுவாகவே பேசிகொண்டிருந்தார் அவர் பேச்சின் இடைவெளியில் திடீர் என்று “மலரும் நினைவுகள்” என்றார். எனக்கு சட்டென அதிர்ச்சியானது. இவர் இவ்வளவு வருடமாகியும் நம்மை நினைத்துகொண்டிருக்கிறாரா..!? என்று ஆச்சரியப்பட்டேன். அப்போ அவர் எழுதியது உண்மையா, பொய்யா.? என்று எனக்குள் பல கேள்விகள் கேட்டுகொண்டேன். இப்படி இருக்கும் வேலையில் என் சித்தப்பா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்திருந்தார்கள் நான் என் மாமாவுக்கு இந்த தகவல் தெரியுமோ, தெரியாதோ என நினைத்து அவரின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவரும் பேசினார் பின், “சரி பெர்சனலாக அப்புறம் பேசுவோம்..” என்றார். எனக்கு என்னவென்றே புரியவில்லை என்ன அப்போது “மலரும் நினைவுகள்” என்றார். இப்போது இப்படி சொல்கிறார். இவர் இன்னும் நம்மை நினைத்துகொண்டுதான் இருக்கிறாரா.. என்ற நினைப்பில் அவரின் அலைபேசிக்கு  ஒரு நாள் கழித்து மீண்டும் அழைத்தேன். அவர் பேசினார் இப்போது அவரிடம் நான் அந்த கடிதம் பற்றி என்னை பல இரவுகள் தூங்காமல் தூரத்திய அந்த வார்த்தைகளை பற்றி கேட்டேன். “ஏன் மாமா அப்படி எழுதினிங்க..” என்றேன். அவர், “என்ன எழுதினேன்.?” என்றார். அதான் மறந்திடிங்களா.. “நீ மாறிவிட்டாய் என்று நினைத்தேன் அதனால் நானும் மாறிவிட்டேன்” என்று  சொன்னேன். அவர் நான் சொன்ன வார்த்தைகளில் அதிர்ச்சி அடைந்துவிட்டார். “ஐய்யோ நான் அப்படியெல்லாம் எழுதவில்லை எனக்கு அந்த வயதில் அதுபோல் எழுத வராது என் அம்மா மேல் சத்தியம்ப்பா.. என்னை நம்பு” என்றார். ஆனால் என் கையெழுத்தை மறந்தாலும் மறப்பேன் என் மாமாவின்  கையெழுத்தை என்னால் மறக்கமுடியாது அவ்வளவு முத்து முத்தான கையெழுத்து அது ஆனால் அந்த முத்தான கையெழுத்துதான் என் வாழ்வு முழுவது முள்ளாகி குத்தி போனது. என் மாமா, “நான் எழுதவில்லை..” என்று மட்டும் உறுதியாக சொன்னார்.  நான் அவரின் பேச்சை நம்பினேன். இப்போது நம்பி என்ன பிரோஜனம் காலம் கடந்துவிட்டது. ஆனால் என் மனதில் 25 வருடமாக தாங்கி வந்த  தீராத பாரம் கொஞ்சம் இறங்கியது அதை  என் மாமாவிடமே கேட்டுவிட்டோம் என்ற நிம்மதி கிடைத்தது. இப்போது என் மாமா பழைய மாமாவாக என் கண்களுக்குள் வந்துவிட்டார். ஆழ்கடலில் முழுகிய எங்கள் காதல் மீண்டும் மேலெழுந்து கரையை நோக்கி  வந்துவிட்டது.!? என்ற சந்தேகம் கூட வந்தது. வந்தால் வரட்டுமே அதில் என்ன குடியா முழுக்கிட போகிறது. எனக்கு என் மாமா மேல் நம்பிக்கை உள்ளது. என் மேல் என் மாமாவுக்கும் நம்பிக்கை உள்ளது. அவர் என் மேல் ஆசைகொண்ட பழைய மாமாவாகவே உள்ளார் ஆனால் இப்போது அவர் அறிவு மெறுகேறிய புதுமையும், பழமையும் கலந்து பட்டொளியாக மிளிர்கிறார். அவர் பேசும் பேச்சில் ஒரு நேர்மை இருக்கிறது. ஒரு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் காதல், காமத்தையும் கடந்த பார்வை கொண்டது. அது எங்கள் இருவருக்குள்ளும் இருக்கிறது.

அதனால் என்ன.! இந்த காதல் தொடர கூடாதா..!? என்று நான் நினைக்கும் வேலையில்  எங்கிருந்தோ, எப்போதோ கேட்ட பாடல் ஒலித்தது, “காற்றுகென்ன வேலி, கடலுக்கென்ன மூடி, கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விளங்குகள் ஏது..”.

 மலர்ந்த நினைவுகள். மீண்டும் மலரட்டுமே..!!!

0 comments: