நான் தினமும் நடைபயிற்சி(வாக்கிங்)
சென்றுவிட்டு வரும்போது ஒரு மனிதனை காண்பேன். அவர்,
முகத்தை சோகமாக வைத்துகொண்டு அந்த மரத்தில் சாய்ந்து
உட்கார்ந்துகொண்டு இருப்பார். அவரின் தலைக்கு மேலே மஞ்சள் எழுத்தில்,
"இங்கு பஞ்சர்
பார்க்கபடும்" என்று எழுதிருக்கும். அவர் வீடும் அங்கேதான் உள்ளது. அவர்
அங்கு தெருவொருமாக பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கிறார். அவர் காலையிலே அங்கு
வந்து உட்கார்ந்துவிடுவார். நான் ஒவ்வொருமுறை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு
வரும்போதேல்லாம் அவரை அங்கு பார்ப்பேன். அவர் சோகமாகதான் இருப்பார் மற்றும் அவர்,
அங்கு சாலையில் சென்றுகொண்டிருக்கும் வண்டிகளின் டயர்களையே
பார்த்துகொண்டிருப்பார். அவரின் இந்த கவனிப்பை நான் தினமும் கவனிப்பேன். அவர் என்
வண்டியும் பார்பார். ஆனால் நான் அவரை பார்கிறேன் என்பதை பார்த்து,
மெல்லியதாக ஒரு புன்னைகைப்பார். அவரின் புன்னகைக்கு பின்
மறைந்திருக்கும் அவரின் சோகம் எனக்கு நன்றாகவே தெரிந்தது. அது என்னை பெரிதாக சோகப்படுத்தியது.
அவரின் சோகம் என்றும் குறைந்ததில்லை... "அவரின் பஞ்சரான முகம் காற்றால்
நிரம்ப என் வண்டியும் பஞ்சர் ஆகட்டும்" என்று நான் நினைப்பேன். மழை பெய்யும்
காலத்தில் அவருக்கு வண்டிகள் அதிகம் வரும். மழையில்தான் மண்ணில் புதைந்திருந்த
ஆணிகள் எல்லாம் வெளிக்கிளம்பி டயரை பதம்பார்க்கும்.
அன்று ஒரு நாள் என் வண்டி, நான் நினைத்தது போல் பஞ்சர் ஆகிவிட்டது. அவரின் கடை நோக்கி
வண்டியை தள்ளிக்கொண்டு போனேன். தூரத்தில் இருந்து அவர் என்னையும், என் வண்டியும்
பார்த்துவிட்டார். உதவிக்கு ஓடிவந்தார். "விடுங்க நான் தள்ரேன்.."
என்றார். அவரின் ஆர்வம் எனக்கு புரிந்தது. அவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் சலீம். நான்
அவரிடம், "என்ன பாய் டயர் எப்படி இருக்கு.. இன்னும் பத்து பஞ்சர்
விழுவதற்கு வாய்ப்பு இருக்கா..?" என்பேன். அவர் என்னைவிட வயதில் மூத்தவர்தான்
ஆனால் அவர் என்னை "அண்ணே." என்றுதான் அழைப்பார். எந்த மதம் என்றாலும்
தமிழனின் பண்பாடு, மரியாதைக்கு ஒரு அடையாளம் இருக்கு. அது என்றும்
குறைவதில்லை... அவர், "ஏண்ணே தமாஸ் பண்றிங்க... டயரை மாத்துங்கண்ணே... பழைசாகிடுச்சு"
என்பார். "மாத்திடலாம் பாய், இப்ப எத்தனை பஞ்சர் ஆகிருக்கு" என்றேன்.
"ரேண்டுண்ணே.." என்றார். ஒரு பஞ்சருக்கு 50 ரூபாய் வாங்குவார். இரண்டு பஞ்சர் 100 ரூபாய் கொடுத்தேன். அவர் என்னிடம் 30 ரூபாய் கொடுத்தார். "ஏன் இருகட்டும்.." என்றேன்.
"இல்லேண்ணே 70 ரூபா போதும்.." என்றார். "வருமையிலும் ஒரு
செம்மை.." என்று அவரை நினைத்து மனம் நெகிழ்ந்தேன்.
இப்போது சில நாட்களாக பாய் அங்கு இருப்பதே இல்லை... மழை காலமும் வந்துவிட்டது.
என் வண்டி அவரின் சாலை இருக்கும் பாதை கடந்துதான் தினமும் செல்கிறது. ஆனால்
சலீம்பாய் அங்கு இல்லை... அன்று ஒரு நாள் பாய் வீட்டின் அருகில் வெள்ளை உடை அணிந்த
மனிதர்கள் சில பேர் நின்றுகொண்டிருந்தார்கள் அவர்கள் எல்லாம் பாய்க்கு உறவினர்கள்
போல.. சலீம்பாயின் உறவினர் ஒருவர், அவர்களிடம் ஏதோ பேசிகொண்டிருந்தார். நான்
அவர்களிடம் நெறுங்கி, "என்ன ஆச்சு.. எங்கே சலீம்பாய்" என்றேன். அதற்கு அவர்,
"பாய் தவறிட்டாருங்க...
பத்து நாளா நெஞ்சு வலின்னு ராயபேட்டை ஆஸ்பிட்டலில் இருந்தாருங்க... இன்னிக்கு
காலையில இறந்துட்டாரு.." என்றார். இதை கேட்டு என் நெஞ்சும் வலித்தது. ...ச்சி,
என்று சலிப்பு ஏற்பட்டு,
ஓங்கி என் வண்டியின் சீட்டை தட்டினேன். என் வண்டியின் டயர்
ஆடியது. நான் டயரை பார்த்தேன். அதுவும் அழுது கொண்டிருந்தது போல... டயரில் காற்று
மெல்ல வெளியேரும் சத்தம் கேட்டது.
இப்போது டயர் பஞ்சர் ஆனதா..!? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் டயரின் சோகத்தை என்னால்
அங்கு புரிந்துகொள்ள முடிந்தது. நான் வண்டியை அங்கிருந்து தள்ளிகொண்டுதான் போனேன்.
அங்கு என் முகமும் பஞ்சர் ஆனது. என் வண்டியும் பஞ்சர் ஆனது. ஆனால் பஞ்சர் போடும்
சலீம்பாய் மட்டும் அங்கு இல்லை...
சலீம்பாய்
காற்றில் கரைந்துவிட்டார்...!
நட்புடன்:
0 comments:
Post a Comment