ஒரு கற்பனை...!
நீங்க தனியா ஒரு மலைமேல் ஏறிபோரிங்க.. நீங்க போகும் பாதை ஒரு மூன்றடி அளவுதான் இருக்கும். வலதுபக்கம் மலைசரிவு, படுபாதளமாக இருக்கிறது, விழுந்தால் அவ்வள்வுதான். இடது பக்கம் செங்குத்தாக இருக்கிறது. அதில் ஏறவே முடியாத நிலை மீறி ஏறினால், கற்கல் சரிந்து விழும். இப்படி உயர்ந்தும், அடந்தும் காணப்படும் மலை மேல் ஏறி போறிங்க.. அப்படி போகும்போது உங்க முன்னாடியும் யாரும் வரவில்லை. பின்னாடியும் யாரும் இல்லை. அங்கு நீங்க மட்டும்தான் தனியா போறிங்க...
இப்படி போய்கொண்டிருக்கும் நேரத்தில் தூரத்தில் நாய்களின் உருமலுடன் குரச்சலாக மாறி நீண்ட சத்தமாக கேட்கிறது. சிறிது நேரத்தில் அச்சத்தம் உங்க அருகிலே கேட்கிறது. நீங்க நாய்களை பார்த்துவிட்டீர்கள். நல்ல கொழு கொழுத்த நாய்கள், அது பத்துக்கு மேலவே இருக்கும். அதுங்க உங்களை நோக்கிதான் ஓடிவருகிறது. இப்ப நீங்க, பின்னாடியும் ஓடமுடியாது, முன்னாடியும் நகரமுடியாது. ஒரு பக்கம் படுபாதாலமான பள்ளம். இன்னோரு பக்கம் செங்குத்தான மலை, இப்ப என்ன செய்விங்க....!? நாய்கள் உங்கள் அருகிலும் வந்துவிட்டது.
நீங்க என்ன செய்விங்க என்று எனக்கு தெரியாது. ஆனா, நான் என் பயத்தை முழுவதும் அனுமதித்து அதை அமைதியாக பார்த்துகொண்டிருந்தேன். ஆம், நான் மேலே சொன்னது கற்பனை இல்லை... இது எனக்கு நடந்த உண்மை.
(இதுதான் அந்த மலை பாதை)
சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம் என்று நினைத்து போனேன். கிரிவலம் எல்லாம் முடித்து ரமணா ஆஷ்ரம் போனேன். அது காலை ஆறு மணி இருக்கும். ஆஷ்ரம் எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு பின்புறம் போனேன். அங்கு ஒரு பலகையில் விருபாட்சி குகை செல்ல இந்த வழியாக செல்லவும் என்றிருந்தது. விருப்பாட்சி குகை ரமணர் பல வருடங்கள் தவம் செய்த இடம். ஞான அடைந்ததும் அந்த இடம்தான் என்று சொல்கிறார்கள். ரமணாஷ்ரம் அடிவாரத்தில் இருந்து, விருப்பாட்சி குகை இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
(இதுதான் ரமணர் தவம் செய்த விருபாட்சி குகை. அக்குகையின் அமைதி, வார்தைகளில் சொல்ல அப்பார்பட்டது. அக்குகைக்கு நீங்க செல்ல வழி, கோயிலின் பின்பக்கமாகவும் செல்லலாம். ரமண ஆஸ்ரமத்தில் இருந்தும் செல்லலாம்.)
நான் மலை மேலே செல்லும் போது அங்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. மேலே செல்ல செல்ல எனக்கு அது மிக அற்புதமான காட்சியாக இருந்தது.
சூரியன் மெல்ல வானில் உதிக்கும் நேரம், பறவைகளின் "கீச், கீச்" என்ற சத்தம், மெல்லிய சில்லென்று வந்த தென்றல் காற்று, கால் வைத்து நடந்த பாறைகளின் சொர சொரப்பு. இப்படி சின்ன சந்தோசத்தை அனுபவித்து கொண்டே மேலே ஏறஏறதான்... அங்கு பின் தொடர்ந்த மர்மமும் எனக்கு புரிந்தது. அங்கு நிலவிய நிசப்தமான அமைதியே அந்த மர்மத்தை கொடுத்தது. அடுத்து அங்கு என்ன நடக்க போகும் என்று தெரியாமல் இருந்தது. ஒருவேளை என்னவேண்டுமானாலும் கூட நடக்கலாம் என்றும் இருந்தது. அது எனக்குள் ஒருவித பயத்தையும் சேர்த்து கவ்விகொண்டது.
நான் அதை அனுமதித்தேன். வெளியே பார்த்த சந்தோசத்துடன், உள்ளையும் ஏற்பட்ட பயத்தையும் பார்த்துகொண்டேதான் சென்றேன். அப்போதுதான் அது நடந்தது. ஆம், கொழு கொழுத்த நாய்கள் குலைத்துகொண்டே என் அருகில் வந்துவிட்டது. ஒரு நாயாக இருந்திருந்தால் விரட்டி விட்டுருக்கலாம். பத்து நாய்கள், அதுங்க என்னை அடித்து காலி செய்வதற்கான போதுமான பலமும் அதுங்ககிட்ட இருந்தது. அதுங்க, என்ன கடிக்க கூட வேண்டாம் மொத்தமா சேர்ந்து என்னை தள்ளிவிட்டிருந்தாலும் போதும், நான் பரலோகம் சென்றிருப்பேன். அதுங்ககிட்ட நான் என்ன செய்திருக்க முடியும்.!?
எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று என் பயத்தையும் கவனித்துகொண்டே அமைதியாக நின்றுவிட்டேன். என்னை நோக்கி வேகமாக ஓடி வந்த நாய்கள், என்னை கடந்து சென்றுவிட்டது. பின்னால் வந்த ஒரு நாய் மட்டும் என்னருகில் நின்றுவிட்டது. சிறிது நேரம் அது என்னையே ஏறிட்டு பார்த்து கொண்டிருந்தது. பின் மெல்ல வந்து, என்னை நன்றாக முகர்ந்து பார்தது. நானும், பார்கட்டும் என்று விட்டுவிட்டேன். சிறிது நேரம், அது அங்கு அமைதியாக இருந்து. பின் அந்நாயும் சென்றுவிட்டது. அப்போது என்னை கவ்விய பயம் காற்றில் மெல்ல கரைந்துகொண்டிருந்தது.
சித்தர்கள், காக்கா குருவி என்று பல உயிர்களாக மலையில் உலாவார்கள் என்று கேள்விபட்டிருக்கேன். என்னை முகர்ந்து பார்த்த நாய் கூட சித்தராக கூட இருந்திருக்கலாம். "ஒருவேலை இவனும் என்னை போல நாயாக இருக்கிறானே..." என்றுகூட நினைத்திருக்கலாம். யார் அறிவார்.!?
ஆபத்து என்று உணர்ந்தும், அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் ஒரு வித மர்மத்துடன் செல்வதில்தான் நாம் காணும் கடவுள் வாழ்கிறார். உங்க நாடி நரம்புகள் முருக்கேரி மரண பயம், உங்களை தொற்றிகொள்ளும்போதுதான் இருக்கிறது. ஆன்மிகத்தின் உச்சம்....!
மரணம் உங்கள் அருகில் வரும்போதே அது தெரியும். அதுபோல ஏதுமற்ற, எந்த முயற்சியும் பலன் அளிக்காத நேரத்தில் மரண அனுபவம் உங்க அருகில் வந்தால், எந்த வீண்முயற்சியும் இல்லாமல் அதனிடம் சரணடைந்து விடுங்கள். அப்போது நீங்கள் இதுவரை காணத பயமாக அது இருக்கும். அப்போது நீங்கள் அதன் அடியின் இருட்டு வரை சென்றிருப்பீர்கள். அதுவே பயத்தின் முடிவான இருட்டாகும். அதுவே மரணத்தின் முடிவு. அவ்விருட்டின் பயம் நீங்கிய பின் எந்த பயமும் உங்களை ஒன்று செய்துவிட முடியாது. பின் நீங்கள் புதியதாக பிறந்தாக உணரலாம். ஒருவேலை இறந்தாலும் முழு பிரஞ்னையுடன்(விழிப்புடன்) இறக்கலாம். அது மீண்டும் பிறக்காமல் பிறவி பெருங்கடலை நீந்தியும் சென்றிருக்கலாம்.
என்றும் நட்புடன்: